தையலை உயர்த்தும் தமயந்தி

கிராமப்புற மேம்பாட்டுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் தமயந்தி மணிவண்ணன். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசு மருத்துவமனையில் முதுநிலை ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வருகிறார்.மருத்துவம் சார்ந்து பணி புரிவதற்காக இளங்கலை வேதியியலும் ஆய்வக நுட்ப பணிக்காக பட்டயப் படிப்பும் படித்தவர். அதே சமயம் சமூக சேவையை முறைப்படி செய்வதற்காக இவர் சமூகவியலிலும் பட்டம் படித்து இருக்கிறார்.

‘சமூக சேவைக்காக வாழ வேண்டும். வாழ்வதற்காக சமூக சேவை செய்ய வேண்டும்’ என்பதே நான் சமூகவியலில் பட்டம் பெற்றதன் நோக்கம் என்கிறார். சிறந்த சமூக சேவைக்காக இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். என்னதான் சேவை செய்கிறார் இவர்?இயற்கை விவசாயத்தை பரவலாக்குவதற்காக விவசாயிகளை சந்தித்து இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து பேசி வருகிறார். நாட்டு இன மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக கிராமம்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்கிறார். பெண்கள் கையில் பணம் புழங்குவதற்காகவும், அவர்கள் தங்கள் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சிறு தொழில் பயிற்சி அளிக்கிறார்.

பனை தமிழகத்தின் மரம். அதை காப்பற்றி வளர்ப்பதன் மூலம் மக்கள் பொருளதாரம் மேம்படுவதற்கும், பனைப் பொருள்கள் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் குறித்தும் மக்களிடையே எடுத்துச் சொல்கிறார். விழிப்புணர்வு பணியோடு நின்றுவிடாமல் பனை பராமரிக்கும் பணியை கோவை பேரூர் ஆதீனம் வழிகாட்டுதலுடன் 250 கிராமங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

நாட்டு மாட்டு சாணத்தில் சுமார் 200 பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய கிராமப்புற மக்களுக்கு வழி காட்டியிருக்கிறார். விளிம்புநிலை பெண்களின் நிலை மேம்பட அடிப்படை பயிற்சிகளாக தையல், கணினி பயிற்சி, சோப்பு தூள், சோப்பு, மசாலா, ஊறுகாய், வடகம், வற்றல் ஆகியவை தயாரிக்கும் பயிற்சியையும் தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து வழங்கி வருகிறார். மேலும் பெண்கள் தொழில் செய்ய தேசிய இளையோர் கூட்டுறவு வங்கி மூலம் ஏற்பாடும் செய்து கொடுக்கிறார் தமயந்தி. தையலை உயர்வு செய்வதன் மூலம் மட்டுமே தரணியை உயர்த்த முடியும் என்று சொல்லும் தமயந்தி, சேவைப் பணிகள் மூலம் இன்று சிகரம் தொட்டிருக்கிறார்.
-ஆதலையூர் சூரியகுமார்