சபரிமலை மெய்நிகர் வரிசை

சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக கேரள காவல்துறையினர் ஏற்படுத்திய மெய்நிகர் வரிசை முறையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களைக் கட்டுப்படுத்தவும், சோதனை செய்யவும் காவல் துறையினர் தொடர்ந்து உதவி செய்வார்கள். காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த 11 ஸ்பாட் புக்கிங் மையங்களை தேவசம் போர்டு கையகப்படுத்தும். மெய்நிகர் வரிசையை ஏற்பாடு செய்ய தேவசம் போர்டு சிறப்பு வசதிகளை செயல்படுத்தும். தேவை ஏற்பட்டால் ஐ.டி துறை பலப்படுத்தப்பட்டு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பம்பை மற்றும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் மற்றும் சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மெய்நிகர் வரிசையின் காவல்துறையின் கட்டுப்பாடு குறித்து உயர்நீதிமன்றம் ஏற்கனவே தங்கள் சந்தேகங்களையும் அதிருப்தியையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகது.