ரஷ்யா உக்ரைன் போர்

முன்னாள் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. உக்ரைன் எல்லையில் 2 லட்சம் படை வீரர்களை குவித்தது. இதற்கு உலக நாடுகளின் தெரிவித்த கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாத ரஷ்யா அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. சக்தி வாய்ந்த குண்டுகளால் ராணுவ தளவாடங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது.

ரஷ்யாவிற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 27 நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளன. ரஷ்யா தாக்குதல் விவகாரத்தில் பாரதம் தலையிட வேண்டும், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று உக்ரைன் தூதரகம் கோரியது.

ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், பாரத தேசத்தவரை மீட்க உக்ரைன் சென்ற விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. உக்ரைன் தலைநகருக்கு பாரதத்தவர்கள் யாரும் வரவேண்டாம், உக்ரைனில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் செல்ல வேண்டும் என்று பாரத தூதரகம் எச்சரித்துள்ளது. பாரதம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் பாரதம் நடுநிலையை வகிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்கே சிங் தெரிவித்துள்ளார். அமைதியான வழியில் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார். உக்ரைனுடனான போர் பதற்றத்தால் பாரதத்துடனான உறவு பாதிக்காது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகள் நேரடியாக களத்தில் இறங்கினால் இது உலகப்போராக மாறலாம் என்பதால் அவை நேரடியாக களமிறங்காது என நம்பலாம். நேட்டோ நாடுகள் அளித்த ஆயுதங்களைத் தவிர, உக்ரைன் ராணுவ வீரர்களிடம் உள்ளவை எல்லாம் சற்றே பழைய ஆயுதங்கள், எதிரில் நிற்பதோ நவீன ஆயுதங்கள் தரித்த ரஷ்யா எனும் ஜாம்பவான். வெளியில் இருந்து மட்டுமே ஆதரிக்கும் நேட்டோ நாடுகள் என்ற நிலையில், உக்ரைன் வீரர்களின் மனவலிமை குறைந்துள்ளது கடந்த நாட்களில் தெளிவாக தெரிந்தது. இதனால் இந்த போர் வெகு நாள் நீடிக்காது என்பது திண்ணம்.

பாரதத்திற்கு என்ன பாதிப்பு?

உலக நாடுகள் ஒன்றோடொன்று பரஸ்பரம் சார்ந்து இருக்கும் இக்காலத்தில், எந்த நாட்டில் போர் நடந்தாலும் அது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும். பாரதமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த போர் பதற்றத்தால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யாவும், உக்ரைனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆக இதன் விலை உயரக்கூடும்.

பாரதத்திற்கு தேவையான சூரியகாந்தி எண்ணெயில் 70 சதவீதம் உக்ரைனிலிருந்தும் ரஷ்யாவில் இருந்து 20 சதவீதமும் அர்ஜென்டினாவில் இருந்து 10 சதவீதமும் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் விலை உயரலாம். உலகின் முக்கிய பார்லி உற்பத்தி நாடு உக்ரைன். இதனால் பார்லி விலை உயரும். உலகளவில் பல்லேடியம் உலோகத்தின் முக்கிய ஏற்றுமதியாளர் ரஷ்யா. வாகனங்கள்,  அலைபேசிகளில் இது பயன்படுத்தப்படுவதால் ரஷ்யாவின் மீதான தடைகளால் இவற்றின் விலையும் உயரும். உக்ரைனுக்கு பாரதத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் மருந்து பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த போரால் மருந்து ஏற்றுமதி பாதிக்கப்படக்கூடும். வழக்கம்போல, இதுபோன்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் தங்கத்தின் விலை மேலும் உயரலாம்.