ஆர்.எஸ்.எஸ். பெயரில் போலி சர்வே

தெலுங்கானா மாநிலம், நவம்பர் 3ம் தேதி முனுகோடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் முனுகோட் தொகுதியில், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் பெயரில் இணையத்தில் ‘ஆர்எஸ்எஸ் உள்கட்சி அறிக்கை’ என்ற தலைப்பில் போலியான ஒரு போலி சர்வே ரிப்போர்ட் பரப்பப்பட்டது. இதனை ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தெலுங்கானா மாநில செயலாளர் கச்சம் ரமேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், “இந்த அறிக்கை, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கையெழுத்திடப்பட்டு, மக்களைக் குழப்பும் மற்றும் தவறாக வழிநடத்தும் தவறான நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற எந்தவொரு கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த போலி ஆவணத்தை விளம்பரப்படுத்தும் குறும்புத்தனமான செயலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்டிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கடந்த 97 ஆண்டுகளாக தேசத்தைக் கட்டியெழுப்புவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வ அமைப்பு. அரசியல் ஆதாயங்களுக்காக, போலியான, ஆதாரமற்ற, நம்பகத்தன்மை இல்லாத செய்திகள் மற்றும் கருத்துகளை வெளியிடும் நபர்களால், ஆர்.எஸ்.எஸ் போன்ற கலாச்சார தன்னார்வ தொண்டு நிறுவனத்தை இழிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என கூறியுள்ளார். மேலும், இந்த போலி ஆவணங்கள் மற்றும் செய்திகளுக்கு காரணமான நபர்களை அரசு கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான, சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.