அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரிக்கை

சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) ஆகியவற்றின் பதிவை ரத்து செய்யக் கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மத்திய செயல் தலைவர் அலோக் குமார், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சந்திப்புக்கான நேரம் ஒதுக்க கேட்டுள்ளார். இதுகுறித்து வி.ஹெச்.பி தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29ஏவின்படி, ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியின் குறிப்பிலும் கட்சி மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு குறிப்பிட்ட விதியைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த தலைவரான ஸ்வாமி பிரசாத் மௌரியாவின் சமீபத்திய அறிக்கைகள், ராமசரித்மனாஸை இழிவுபடுத்துவது, அதன் பக்கங்களை எரிப்பது போன்ற செயல்பாடுகள் பாரதத்தின் குடிமக்களின் பரந்த பிரிவினராக உள்ளவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும், தீங்கிழைக்கும், கோபம் கொள்ள வைக்கும் வகையில் வேண்டுமென்றேசெய்யப்பட்ட செயல்கள் ஆகும். மேலும், மௌரியா வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு உள்ளது என்பது அவரது அறிக்கைக்கு அவரது கட்சியினர் அனைவரும் ஆதரவு அளிப்பதை நிரூபிக்கிறது. இதேபோல், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த டாக்டர் சத்ரசேகர் ராமசரித்மனாஸைத் தடை செய்யக் கோரி வெளியிட்ட அறிக்கைகளும், ஹிந்து மதத்தின் பிற புனித நூல்களை வேண்டுமென்றே தீங்கிழைக்கும் வகையில் விமர்சிப்பதும் ஹிந்து சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே அவநம்பிக்கையையும் பிளவுகளையும் ஏற்படுத்துகின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மூலம் அந்த அறிக்கைக்கு கட்சியின் ஆதரவு உள்ளது என்பது நிரூபிக்கப்படுகிறது. எனவே, சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட அடிப்படை நிபந்தனைகளை மீறியுள்ளதால், அவற்றின் பதிவை திரும்பப் பெறுவதற்கு அவர்களே பொறுப்பாகிவிட்டனர்” என கூறியுள்ளார்.