சிறுமிகளுக்கு எப்.எம்.ஜியை தடை செய்ய கோரிக்கை

முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த, தாவூத் போஹ்ரா பிரிவின் மதத் தலைவர் சையத்னா தாஹேர் ஃபக்ருதீன், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், எப்.எம்.ஜி நடைமுறையை முழுமையாக தடை செய்து அதனை சட்டவிரோதமாக்க அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடிதத்தில், “எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். எப்.எம்.ஜி நடைமுறையை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். இந்த நடைமுறையை தடை செய்வதற்கும், எப்.எம்.ஜி’யை சட்டவிரோதமாக்குவதற்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இது பொதுவாக சிறுமிகளிடம் அவர்களின் அனுமதியின்றி பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற நிலையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறையானது கிளிட்டோரல் டி ஹூடிங் (சி.டி.ஹெச்) கிற்கு ஒப்பானது, மேற்கத்திய நாடுகளில், இது மருத்துவ ரீதியாக அனுமதிக்கப்பட்ட மற்றும் மிகவும் பொதுவான செயல்முறையாகும். இது சில ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப்பட்ட கிளிட்டோரிஸின் ஒரு பகுதியை அகற்றுவது அல்ல. இந்த செயல்முறையின் நோக்கம் ஒரு பெண்ணின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். இது மருத்துவ சூழலில் தகுதி வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்படுகிறது. இந்த நடைமுறை ஆர்வலர்களிடமிருந்தும் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் என்னிடம் வந்தனர். இது அவர்களின் அனுமதியின்றி இளம்பெண்கள் மீது வழக்கமாக மேற்கொள்ளப்படும் சுகாதாரமற்ற, மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்த நியாயமான கவலைகளை எடுத்துரைத்தனர். இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிக்கல்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார். மேலும், ‘எப்.எம்.ஜி நடைமுறையை நிறுத்த வேண்டும், பெண்கள் முதிர்ச்சி அடையும் வரை காத்திருக்க வேண்டும், பாதுகாப்பான, சுகாதார நிலைமைகளில் மட்டுமே அதனை மேற்கொள்ள வேண்டும்’ என சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

எப்.எம்.ஜி என்பது பெண்ணின் பிறப்புறுப்பு சிதைவு ஆகும். இதில், பெண்ணின் வெளிப்புற பிறப்புறுப்பை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகற்றுவதைக் குறிக்கிறது, இது அவர்களின் பாலியல் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என நம்பப்படுகிறது. முஸ்லிம்கள் இதனை கட்னா, கஃப்ஸ் எனவும் அழைக்கின்றனர். எப்.எம்.ஜி சில முஸ்லீம் சில சமூக பிரிவுகளில் நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான பிரிவுகளில் இது நடைமுறையில்லை. அதுகுறித்து முடிவெடுப்பது குழந்தைகளின் பெற்றோரிடத்தில் விடப்படுகிறது. உலக அளவில் அதனை ஆதரித்தும் எதிர்த்தும் ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுள்ளன. சில கிறிஸ்தவ மற்றும் ஆன்மிஸ்ட் குழுக்களிலும் உள்ளது. உதாரணமாக, எகிப்தில் உள்ள காப்டிக் கிறிஸ்தவர்கள், எத்தியோப்பியாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மற்றும் சூடான், கென்யாவில் உள்ள புராட்டஸ்டன்ட்டுகள் மற்றும் கத்தோலிக்கர்களிடையே இது காணப்படுகிறது. எத்தியோப்பியாவின் பீட்டா இஸ்ரேல் என்ற யூதக் குழுவும் இதைப் பின்பற்றியதாக அறியப்படுகிறது. கிமு 163ல் இருந்து கிரேக்க பாப்பிரஸில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இஸ்லாமிய சட்டத்தின் ஷாஃபி பதிப்பின் பரவலால் இது அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.