ஆட்டுப்பாலுக்கு எப்போது விடிவு

பெரும்பாலும் பசும்பால்தான் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு மற்ற பால்வகைகளை உதாசீனப்படுத்துவது விரும்பத்தக்கது அல்ல. மருத்துவ குணத்துக்காக கழுதைப்பாலும் ஆற்றலைப் பெருக்குவதற்காக ஒட்டகப் பாலும் விரும்பப்படுகின்றன. பசும்பாலைவிட எருமைப்பாலில் சுமார் 25 சதவீதம் புரதச்சத்து உள்ளது. பசும்பாலைவிட எருமைப்பால் அடர்த்தி மிக்கது. எனினும் எருமைப்பாலை விட பசும்பாலே மனிதர்களுக்கு உகந்தது என்ற கருத்து பரவலாக மேலோங்கியுள்ளது.

பண்டைக்காலத்தில் பூமியை வலம் வந்த மாலுமிகள் தங்களுடன் ஆடுகளையும் கொண்டு சென்றனர். தூய பாலைப்பெருவதற்காகவே அவர்கள் இவ்வாறு ஆட்டுடன் பயணித்தனர். பசும்பால் செரிமானமாக சுமார் ஒருமணி நேரம் ஆகும்.  ஆனால் ஆட்டுப்பால் 20 நிமிடங்களிலேயே நன்கு ஜீரணம் ஆகிவிடும். மகாத்மா காந்தியின் விருப்ப உணவுப்பட்டியலில் ஆட்டுப்பாலும் நிலக்கடலையும் இடம் பெற்றிருந்தன.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆட்டுப்பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டுள்ளனர். இதனால் ஆட்டுப்பாலுக்கு முன்னுரிமை அளிக்க முற்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பசும்பால் பவுடர் போல ஆட்டுப்பால் பவுடரும் தாராளமாகக் கிடைக்கிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ‘’தமிழகத்தில் பாரம்பரிய நாட்டு ஆட்டினங்கள் அதிக அளவில் உள்ளன. இவை மக்களுக்கு சத்தான உணவையும் வருவாயையும் தருவதோடு பயிர்களுக்கு உரங்களையும் தருகின்றன. வாடிகுறி, யாடிகுறி, ஜன்னிகுறி, மொள்ளகுறி, ஜன்னாகுறி, ஜாலிகுறி என பலவகையான ஆட்டினங்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவை. இவை தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளன. எனவே இந்த ஆட்டினங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய இன ஆட்டு வாரியம் அமைக்கவும் இதில் குரும்பர் இனத்தவர்களைத் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘’குறிப்பிட்ட வாரியம் அமைக்குமாறும் அதில் குறிப்பிட்டோரை நியமிக்குமாறும் அரசுக்கு உத்தரவிடமுடியாது. எனவே அரசிடம் முறையிட்டு மனுதாரர் உரிய நிவாரணம் பெறலாம்’’ எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர். தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பசும்பாலையும் எருமைப்பாலையும் சந்தைப்படுத்தி வருகிறது.

இதைப்போல ஆட்டுப்பாலையும் சந்தைப்படுத்த முன்வரவேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் ஆட்டுப்பண்ணைகளை அமைக்க அரசு பொருளாதார ரீதியாக ஊக்கமளிக்கவேண்டும். இதனால் ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்பு பெருகும் அதுமட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் ஆட்டுப்பால் நுகர்வு அதிகரிக்கும். இது மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்புத் திறனை மேலோங்கவைக்கும். எனவே தமிழக அரசு இதில் கவனம் செலுத்த முன்வருவது பெரிதும் விரும்பத்தக்கது.