ஆகாவென்று எழுந்தது பார் ஆகஸ்டில் ஒரு கிளர்ச்சி!

‘‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தை வர்ணித்துப் பாடினார் நாமக்கல் கவிஞர். ஆகஸ்ட் 15, 1947ல் பாரத நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம் அப்படி அகிம்சை வழியில்தான் கிடைத்தது என்று நமது பள்ளிப்பாடத்தில் படித்திருக்கிறோம்.அது உண்மையல்ல, நேதாஜி போன்ற தலைவர்களை விடுங்கள். காந்திஜியின் காங்கிரஸ் தொண்டர்களே அகிம்சையை முழுவதுமாக ஏற்கவில்லை.

ஆம் ‘வெள்ளையனே வெளியேறு’ கிளர்ச்சி 1942ல் ஏற்பட்டபோது, நாடெங்கிலும் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்தெழுந்தார்கள். ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தார்கள்; காவல் நிலையங்களை அடித்து நொறுக்கினார்கள். தடியடி நடத்திய ஆங்கிலேய காவல்துறை மீது பதில் வன்முறை நிகழ்த்தினார்கள். கிரிப்ஸ் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தார் காந்திஜி. அடுத்த சில மணிநேரத்துக்குள் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் சிறை வைக்கப்படும் இடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட வைஸ்ராய் சபையும் அதை அங்கீகரித்தது.அதுமட்டுமல்ல, காந்திஜி நடத்திவந்த ‘நவஜீவன்’ பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து காவல்துறையினர் சூறையாடினார்கள். அவரது உதவியாளர் மகாதேவ் தேசாய், இருவரும் சிறை வைக்கப்பட்டிருந்த ஆகாகான் மாளிகையிலேயே ஆகஸ்ட் 15ம் தேதி உடல்நலமின்றி உயிரிழந்தார். முன்னதாக, காந்திஜி சிறைக்குச் செல்வதற்கு முன்னால் ‘செய் அல்லது செத்து மடி’ என்றார். அதன் அர்த்தத்தை ஆங்கிலேயர்கள் திரிக்க முயன்றார்கள்.

பிரிட்டீஷ் அரசின் இந்திய விவகாரங்கள் அமைச்சராக இருந்த அமெரி என்பவர் பி.பி.சி. வானொலியில் பேசினார். அதில் “ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டில் வன்முறையை ஏவ காங்கிரஸ் சதி செய்கிறது” என்று குற்றம்சாட்டினார். காந்திஜியின் ஆசி வன்முறையாளர்களுக்கு உண்டு என சந்தேகத்தை எழுப்பினார். இவையெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களை ஆத்திரமடையச் செய்தது. அதன் விளைவாக, தேசமெங்கும் ‘ஆகஸ்ட் கிளர்ச்சி’ ஆவேசமாக வெடித்தது.

நேரு, படேல், ராஜேந்திர பிரசாத் என நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழகத்தைச் சேர்ந்த தீரர் சத்தியமூர்த்தி ஊருக்கு வரும் வழியில் ரயிலிலேயே கைது செய்யப்பட்டார். பிறகு, சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், கிராமத்து விவசாயி போல வேடம் தரித்து, அரக்கோணத்தில் இறங்கினார். அங்கு உணவகம் நடத்திவந்த தேவராஜ ஐயங்காருடன் கிளம்பி ராணிப்பேட்டையில் தீனபந்து ஆசிரமம் நடத்திக்கொண்டிருந்த கல்யாணராம ஐயரைச் சந்தித்து சில செய்திகளைக் கூறினார். மறுநாள் வேலூரில் காங்கிரஸ்காரர்களை ஒரு ரகசியக் கூட்டத்தில் சந்தித்துவிட்டு திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும் சென்றபின் விருதுநகர் திரும்பியதும் கைதானார்.

வட மாநிலங்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் அகிம்சை வழியிலேயே போராட்டம் நடந்தது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட சென்னை மாகாண கவர்னர் “சென்னை மாகாணத்தில் வன்முறைகள் எதுவும் நடக்காதது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். இந்தப் பேச்சு தமிழகத்திலும் வன்முறையை ஏவிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒட்டி, தமிழகத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை இனி காண்போம்.

கோவை
தொழிற்சங்கத் தலைவரான என்.ஜி.ராமசாமி தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூடி விவாதித்தனர். அந்தக் கூட்டத்தில் என்.ஜி.ராமசாமி அன்றைய நிலைமையை தொண்டர்களுக்கு விளக்கினார். கடைசியில் அவரவர்க்கு சரியென்று தோன்றும் வழியில் போராடிக் கொள்ளுங்கள், ஆனால் யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது என்று எச்சரித்து அனுப்பப்பட்டார்கள். எது எப்படியிருந்தாலும் யாரையும் துன்பப்படுத்து வதோ, கொலை செய்வதோ, தனிமனித சொத்து எதற்கும் சேதம் விளைவிப்பதோ கூடாது என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுப் பிரிந்தார்கள்.

மறுநாள் காலை என்.ஜி.ராமசாமி கைது செய்யப்பட்டார். அன்று இரவு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டு, போத்தனூர் வழியாக வரும் ஒரு வெடிமருந்து ஏற்றிய கூட்ஸ் ரயிலை கவிழ்க்க சிலர் ஒன்று திரண்டனர். போத்தனூர்- சிங்காநல்லூர் இடையில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. இரவு நேரத்தில் வெடிமருந்துகளை ஏற்றிக் கொண்டு வந்த அந்த கூட்ஸ் ரயில் அந்த இடம் வந்ததும் நிலை தடுமாறி பெட்டிகள் கவிழ்ந்தன. பெட்டிகள் உடைந்தன, பொருட்கள் சேதமாயின. இந்தச் செயலைச் செய்தது யார் என்பது தெரியாமல் காவல்துறையினர் குழம்பினர்.ஆகஸ்ட் 26ம் தேதி இரவு சூலூர் விமான தளம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. கள்ளுக் கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட தொண்டர்களை காவலர்கள் மலம் தோய்ந்த செருப்பால் அடித்தார்கள். பொள்ளாச்சி சிறையில். போராடி சிறையில் இருக்கும் தொண்டர்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் தடிகொண்டு தாக்கினார்கள். ஆண்களின் மீசையைக் கையால் பிடித்து இழுத்தும், தீ வைத்துப் பொசுக்கியும் துன்புறுத்தினார்கள்.

திருவையாறு
ஆகஸ்ட் 10ம் தேதி திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிக்கும் கூட்டத்தை எஸ்.ஆர்.சோமசேகர சர்மா என்ற மாணவர் ஏற்பாடு செய்தார். அவரோடு கு.ராஜவேலு, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் ஈடுபட்டிருந்தனர்.

ஆகஸ்ட் 12ம் தேதி புஷ்யமண்டபத் துறையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆவிக்கரை ஆசிரியர் சிதம்பரம் பிள்ளை, முன்னாள் ஆசிரியர் சங்கரய்யர் ஆகியோர் பேசினார்கள். மறுநாள் திருவையாறு கடைத்தெருவில் காந்திஜி உள்ளிட்ட தலைவர்களின் கைதை எதிர்த்து கடையடைப்பு செய்தார்கள். அப்போது சுமார் 200 அல்லது 300 பேர் கொண்ட கூட்டம் ஒன்று கூடியது. இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இருந்தார்கள். இந்தச் செய்தி அறிந்து அந்த இடத்துக்கு வந்த காவலர்கள், கூட்டத்தினரை கலைந்து போய்விடுமாறு எச்சரித்தார்கள். அப்போதும் கூட்டம் கலையாததால் மக்கள் கூட்டம் மீது தடியடி நடத்தினார்கள்.

ஆனால் கூட்டம் கலைந்து போகாமல் வன்முறையில் ஈடுபட்டார்கள். கற்களை எடுத்து வீசினர். போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது. கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்கிருந்து நகர்ந்து தபால் அலுவலத்தின் மீது கற்களை எறிந்து தந்தி ஒயர்களை அறுத்தெறிந்து அறிவிப்பு பலகையையும் உடைத்துத் தெருவில் விட்டெறிந்தார்கள்.

சுமார் 10 மணிக்கு மக்கள் கூட்டம் மிகப் பெரிதானது. ஊரின் தென்பகுதியில் காவிரி நதி தென்கரையில் இருந்த முன்சீப் நீதிமன்ற வளாகத்தை நோக்கி நகர்ந்தது. கட்டடத்தில் கல்லெடுத்து வீசி, கூறையில் பதித்திருந்த கண்ணாடிகளையும், பெயர் பலகையையும் உடைத்தது. அங்கு கூடத்தில் மாட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் மன்னரின் போட்டோ உடைத்தெறியப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது.

அடுத்து, பக்கத்திலிருந்த சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கும் சூறையாடினார்கள். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு, இறுதியில் 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு, தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பில் 4 பேர் விடுதலையானார்கள். மீதமுள்ள 40 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பெல்லாரியில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

 சீர்காழி சதி வழக்கு
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பிரபலமானது சீர்காழி சதி வழக்கு. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் தலைவர் ராம்நாத் கோயங்கா, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமன், உதவி ஆசிரியர் என்.ராமரத்தினம் ஆகியோர் இணைந்து தமிழகத்தில் ஏதாவது ஒரு பாலத்தில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டார்கள்.

கோயங்காவும், சிவராமனும் ஆந்திரா –ஒடிஷா எல்லையிலுள்ள செல்லூர் என்ற இடத்தில் இருந்த மைக்கா சுரங்கத்தில் வெடி வைத்துத் தகர்க்கப் பயன்படுத்தும் டைனமைட் குச்சிகளை சுமார் 200 பவுண்டு வாங்கிக் கொண்டு வந்தனர். அவற்றைப் பாதுகாப்பாகச் சென்னைக்குக் கொண்டு வந்து, நம்பகமான தொண்டர்கள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர்.

கும்பகோணத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த பந்துலு ஐயரின் மகன் டி.வி.கணேசனும் தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தார். அவரும் சிவராமனும் திருக்கருகாவூரில் இரண்டு நாட்கள் தங்கி ஆலோசித்தனர். பிறகு இருவரும் அம்மாபேட்டையில் சில காங்கிரஸ் நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு ஆலோசனை செய்தனர். அங்கு காங்கிரஸ் தொண்டர் ஒருவரிடம் இரண்டு டைனமைட் குச்சிகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தார்கள்.

அவந்திபுரம் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தி, தினமணி என்.ராமரத்தினம், கணேசன் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை செய்தனர். இவர்கள் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பிரிட்டிஷ் அரசு தன் செயல்பட்டை இழந்து தவிக்கும்படியாக இருக்க வேண்டும் என்று ஆலோசித்து, இறுதியாக மாயவரத்துக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் ரயில் மார்க்கத்தில் ஏதாவதொரு ஆற்றுப் பாலத்திற்கு வெடி வைத்துத் தகர்ப்பது என்று முடிவாகியது.

மூவரும் சீர்காழிக்குச் சென்று அவ்வூரில் காங்கிரஸ்காரராக விளங்கிய சுப்பராயனைச் சந்தித்தனர். சுப்பராயன் தனது நண்பர்களுடன் திட்டம் குறித்து விரிவாக விவாதித்து உப்பனாறு பாலத்தைத் தங்கள் இலக்காகத் தீர்மானித்துக் கொண்டனர். கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நாட்கள் வரை தினமும் தொடர்ந்து செய்து ஒரு வழியாக வேலை முடிந்தது. இளைஞர்கள் பாலத்தில் வெடிகுண்டுகளை வைத்து, திரிக்கு தீ வைக்க சரியான நேரம் பார்த்துக்
கொண்டு, புதர்களுக்கிடையில் மறைந்து கொண்டனர்.

அந்த நேரம் பார்த்து ரயில் தண்டவாளங்களைப் பாதுகாக்கும் காவலர்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பாலத்தடியில் வைக்கப்பட்டிருந்த குண்டும், அதன் திரி குடைக்கம்பியோடு நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை அங்கிருந்து அகற்றி விட்டு உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். பாலத்துக்கு சேதம் இல்லாவிட்டாலும், இந்த நடவடிக்கை மிகப்பெரிய நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டது.

சுப்பராயன், தினமணி என்.ராமரத்தினம், டி.வி.கணேசன் உள்ளிட்டோர் கைது செய்து வழக்கு தொடுத்தனர். சுப்பராயனுக்கு ஐந்தாண்டு சிறை, வெங்கடராமன், வெங்கடேசன், சுப்பிரமணியன் ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. இவர்கள் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குரும்பூர் சதி வழக்கு
தமிழகமே பற்றியெரியும்போது புரட்சித்தீ மூட்டும் நெல்லை மண் மட்டும் சும்மா இருக்குமா என்ன? அங்கிருந்த இளைஞர்கள் சேர்ந்து ‘சுதந்திர சேனை’ எனும் ஒரு படையை உருவாக்கினார்கள்.இவர்கள் முடிவுசெய்தபடி ஆகஸ்ட் 12ம் தேதி ஆறுமுகனேரி சந்தைத் திடல் நிரம்பி வழிந்தது. மக்கள் மத்தியில் சில தலைவர்கள் பேசிவிட்டு அனைவரும் புறப்பட்டு உப்பளம் நோக்கிச் சென்றார்கள். உப்பளத்தில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூட அங்கு வேலைகள் நின்றுபோயின. உடனே காவலர்கள் அனைத்து தொண்டர்களையும் கைது செய்து திருச்செந்தூர் சிறையில் அடைத்தார்கள். அங்கு எந்தவித குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் 15 நாட்கள் ரிமாண்டுக்குப் பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான தொண்டர்கள் கிராமம் கிராமமாகச் செல்லத் தொடங்கினர். வழியில் குரும்பூர் ரயில் நிலையத்தை வசப்படுத்திக் கொண்ட தொண்டர்கள் நிலைய அதிகாரியைத் துரத்திவிட்டனர்.சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த துப்பாக்கிகளைப் பறித்துக் கொண்டனர். இந்தச் செய்தி வெளிவராமலிருக்க தந்திக் கம்பிகளை அறுத்துவிட்டனர். எனினும் தகவல் கிடைத்து திருநெல்வேலியிலிருந்து மலபார் போலீஸ், தொண்டர்களைப் பிடிக்க வந்து சேர்ந்தது.

இதன் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்து விட்டார். இவர்கள் பல நாட்கள் தலைமறைவாகச் சுற்றித் திரிந்துவிட்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி குலசேகரப்பட்டினம் உப்பளத்தில் கூடினர். அங்கு இவர்களைச் சுற்றிவளைத்த போலீசாரை தொண்டர்கள் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பிடுங்கிக் கொண்டனர்.

உப்பளத்திலிருந்து கூட்டமாக இவர்கள் ஊருக்குள் மறுநாள் விடியற்காலை இருள் பிரியாத நேரத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முசாபரி பங்களாவில் லோன் என்ற ஆங்கிலேய காவல் அதிகாரி மது அருந்திய போதையில், கையில் தன் ரிவால் வரை ஏந்திக் கொண்டு கூட்டத்தை நோக்கி வந்தான்.தேசபக்தர்களை ஆங்கிலத்தில் கண்டபடி திட்டிக் கொண்டே துப்பாக்கியை அவர்களை நோக்கிச் சுட முயற்சி செய்தான். தொண்டர் ஒருவரின் மார்பில் அவன் ரிவால்வர் பதிந்தது.

அதனால் கோபமடைந்த தொண்டர்கள் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் அவனைக் கொன்றுவிட்டனர். அவன் உடலில் மொத்தம் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது. காங்கிரஸ் தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு குற்றச்சாட்டுகளோடு ‘குரும்பூர் சதி வழக்கு’ எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது.

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு
லோன் துரையின் கொலை சம்பந்தமாக ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ எனும் பெயரில் வேறொரு வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் 64 தேசபக்தர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, 61 பேர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. முக்கியமான எதிரிகளாகச் சேர்க்கப்பட்டவர்கள் காசிராஜன், ராஜகோபாலன், பெஞ்சமின், மங்களபொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம் முதலான 26 பேர்.

இந்த வழக்கு, தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதியாக இருந்தவர் டி.வி.பாலகிருஷ்ண ஐயர். குற்றவாளிகளின் சார்பாக டேனியல் தாமஸ், சிவசுப்பிரமணிய நாடார் முதலான ஐந்து வழக்கறிஞர்கள் ஆஜராயினர். 1943 பிப்ரவரி 8-ம் தேதி தீர்ப்பு வந்தது. நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண ஐயர் மிகமிகக் கடுமையான தண்டனைகளை அறிவித்தார். இருபது வயதே நிரம்பிய காசிராஜனுக்கும், ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை. அது தவிர 74 ஆண்டுகால சிறைவாசம். ஏ.எஸ்.பெஞ்சமினுக்கு மொத்தம் 100 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜன்ம தண்டனை. ஏனையோருக்கு 5 முதல் 12 ஆண்டுகால சிறை தண்டனை.

அப்போது சிரித்துக் கொண்டே காசிராஜனும், ராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்துக் கேட்டனர்: “ஐயா, நீதிபதி அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரேயொரு ஜென்மம்தான். தாங்கள் அதைப் பறிக்கத் தூக்கு தண்டனை விதித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. அதற்கு மேல் மூன்று ஜென்ம தண்டனை விதித்திருக்கிறீர்களே, அதை நாங்கள் எப்போது அனுபவிக்க வேண்டும்? தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகா அல்லது முன்பா?”

தீர்ப்பைக் கேட்டு திடுக்கிட்டு நின்றிருந்த மக்கள் இப்படி இவர்கள் கேட்டதும், கொல்லென்று சிரித்தார்கள். நீதிபதி பாலகிருஷ்ண ஐயர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.தூக்கு தண்டனை பெற்ற காசிராஜனும் ராஜகோபாலனும் மதுரை சிறைக்குக் கொண்டு சென்றனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் கேட்டு ஆத்திரமடைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை சிறையை உடைத்து அவர்களை வெளிக்கொணர்வேன் என்று ஆத்திரப்பட்டார். அதையடுத்து அலிப்புரம் ஜெயிலுக்குக் கொண்டு சென்றுவிட்டனர். தூக்கு தண்டனை கைதிகளான காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதற்காக அவர்கள் சென்னை சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். அந்த சமயம் காந்திஜி சென்னைக்கு வருகை புரிந்தார். ராஜாஜி கேட்டுக் கொண்டதன் பேரில் காந்திஜி மருத்துவமனைக்குச் சென்று இவ்விருவரையும் பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோர் இருபது வயது நிரம்பிய இளைஞர்கள். இந்த இளம் வயதில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது.

மாகாணத்தின் பல இடங்களிலும் இவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மக்கள் ஆயிரக் கணக்கில் கையெழுத்திட்டு மனுக்களை அரசாங்கத்துக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர். ராஜாஜி என்ன பாடுபட்டேனும் இவ்விருவரின் விடுதலைக்குப் பாடுபடுவதென்று உறுதி பூண்டிருந்தார்.இவ்விருவரின் அப்பீல் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து ரிவிஷன் மனுஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அதுவும் தள்ளுபடியானது. வழக்கு தில்லி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கும் இவர்கள் மேல்முறையீடு தள்ளுபடி செய்து தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இறுதி முயற்சியாக லண்டனில் உள்ள ப்ரைவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்யப்பட்டது. அங்கு திறமையான வழக்கறிஞர் ஒருவரை ராஜாஜி ஏற்பாடு செய்து கொடுத்தார். அங்கிருந்த ஆங்கிலேய நீதிபதிகளும் தூக்கு தண்டனையை உறுதி செய்தார்கள்.இந்த இளைஞர்களின் உறவினர்கள் வைஸ்ராய்க்கு கருணை மனுவொன்றை அனுப்பி வைத்தனர். இதற்காக ராஜாஜி வைஸ்ராயைச் சந்தித்து இவ்விரு இளைஞர்களுக்கும் கருணை காட்டவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். கருணை உள்ளம் கொண்டு வைஸ்ராய் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஒப்புக் கொண்டார்.

தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய ராஜகோபாலனுடைய பெயர் அதன்பின் ‘தூக்குமேடை ராஜகோபாலன்’ என்றே அழைக்கப்படலாயிற்று. தண்டனை அறிவித்த பின்னர் அவர் அத்தனை மனத்திண்மையோடு நீதிபதியைப் பார்த்து கேட்ட கேள்வியை இன்று நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது புரட்சித்தீ எழுந்ததை இன்றைய காங்கிரஸ்காரர்கள் மறந்திருக்கலாம். சுதந்திரம் என்பது அகிம்சை வழியில்தான் கிடைத்தது என்று சாதிக்கலாம். ஆனால் இந்த ஆகஸ்ட் புரட்சியில் தமிழர்கள் வீராவேசத்துடன் பங்கேற்றதும் அதனால் அன்றைய ஆங்கிலேய அரசு அலறித் துடித்ததும் மறுக்கமுடியாத வரலாற்று உண்மை.

-அமரர் தஞ்சை வெ.கோபாலன்