அயோத்தி ரயில் நிலைய மறுசீரமைப்பு

அயோத்தி ரயில் நிலையத்தின் முதல் கட்ட மறுசீரமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டப் பணிகள் முடிந்த பிறகு, அயோத்தியில் ஆன்மீக சுற்றுலா பெரிய வளர்ச்சியையும் உத்வேகத்தையும் பெறும். ஏனெனில் அயோத்தி ரயில் நிலையத்தில் தசரா, ஸ்ரீராம நவமி, தீபாவளி, சவுதா கோசி, சௌராசி கோசி பரிக்கிரமாக்கள் போன்ற விழாக் காலங்களில் 25,000 பயணிகளுக்கும் மேல் வருகை புரிவார்கள். அயோத்திக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் அயோத்தி ஸ்ரீராமர் கோயில் தரிசனத்திற்கு திறக்கப்பட உள்ளதால், இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ரயில் நிலையம் இரண்டு கட்டங்களாக மேம்படுத்தப்படுகிறது. முதற்கட்டத்தில், இரட்டை மாடிக் கட்டடம், மேல் விதானம், மேம்பாலங்கள், தங்குமிடம், மருத்துவமனை, எஸ்கலேட்டர்கள், லிஃப்ட், உணவகங்கள், குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்படுகின்றன. இரண்டாம் கட்ட மறுசீரமைப்பில், ரயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், பெரிய வாகன நிறுத்துமிடம் கட்டப்படும். மாநில அரசிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு இரண்டாம் கட்ட மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்த பிறகு, ரயில் நிலையம் நான்கு மடங்கு பயணிகளைக் கையாள முடியும்.