ஹரிவராசனம் விழாவில் ஆளுநர்

சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வானகரத்தில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, ‘மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து உயிர்னங்களுக்கும் வழிபாடு அவசியம். சனாதன தர்மம் தான் நமது தேசத்தை உருவாக்கியது. நமது தேசத்தின் எண்ணம், செயல் போன்ற அனைத்திலும் சனாதானம் உள்ளது. புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவைதான். இந்திய அரசியல் அமைப்பு தான் அரசுக்கு ஆதாரம் மற்றும் ஆன்மா. நமது நாடு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போதே நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. மற்ற நாடுகளைப் போல, நமது நாடு அரசன், ராணுவம் மூலம் உருவாகவில்லை. இந்நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. பாரதம் ராணுவம், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறுவதைபோல ஆன்மிகத்திலும் வளர்ச்சி பெறுவது அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். பாரதம் வல்லரசு நாடாக வளர்ந்துவரும் நிலையில் அதன் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாகவும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாகவும் இருக்கவேண்டும். தற்போது வலிமையான தலைமை பாரதத்தை ஆட்சி செய்துகொண்டுள்ளது. தொடர்ச்சியான ஆன்மிகத்தின் வளர்ச்சியே இந்த தேசத்தின் வளர்ச்சியாகும்’ என பேசினார்.