ராமர் கோயில் அமைவது தேசியத் தன்மானத்திற்கு சிம்மாசனம்

ராமர் கோயில் கட்ட காணிக்கை பெற நாடு தழுவிய மக்கள் தொடர்பு இயக்கம் நடந்து முடிந்துள்ள நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலருமான சம்பத் ராய், ஆர்கனைஸர் வார இதழ் ஆசிரியர் பிரபுல்ல கேத்கருக்கு அளித்த பிரத்யேக நேர்காணலிலிருந்து:

ராமர் கோயில் கட்டுவதற்கு காணிக்கைபெற மிகப்பெரிய அளவில் மக்கள் தொடர்பை முன்னெடுத்துள்ளீர்கள். ராமர் கோயில் தொடர்பான அர்ப்பணிப்பு சமுதாயத்தில் நிலைத்திருக்க எத்தகைய அணுகுமுறை உகந்தது எனக் கருதுகிறீர்கள்?
இந்த மக்கள் தொடர்பு முன்னெ டுப்பில் தகவல் தொடர்புக்கு முன்னு ரிமை அளித்துள்ளோம்.. இது வாய்மொழி யானதாகவும் இருக்கலாம், அச்சடித்த வாசகங்க ளாகவும் இருக்கலாம். அச்சடிக்கப்பட்ட சிறு பிரசுரங்களைக் கையோடு எடுத்துச் செல்கிறோம். பெரும்பாலானோர் தங்கள் தாய்மொழியில் பிரசுரிக்கப்பட்டதை எளிதாகவாசித்துவிடுவார்கள். இந்தப் பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்படும். அனை வருக்கும் ராமர் கோயில் நோக்கம் என்ன என்ற தகவல் எட்டவேண்டும் என்பதற்க்காகவே இந்த ஏற்பாடு.

ராமர் கோயில் கட்டுவதன் முக்கிய நோக்கம் என்ன?
உங்கள் வீட்டுக்குள் அந்நியர் ஒருவர் அத்துமீறிப் பிரவேசித்து, இந்த இல்லம் எனக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அந்நியர் ஒருவர் உங்களது நிலத்தை அபகரித்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் சட்டரீதியாகப் பரிகாரம் தேட முற்படமாட்டீர்களா? உங்களது வீட்டின்மீதும் நிலத்தின்மீதும் உள்ள உரிமையை நிலைநாட்ட முற்படமாட்டீர்களா? இதே உணர்வுதான் தாயகத்தின்மீதும் ராமர் அவதரித்த ஜென்ம பூமியின்மீதும் இருக்கவேண்டும். பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, விக்டோரியா மகாராணி, ஜார்ஜ் மன்னர் ஆகியோரின் சிலைகள் பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பெரிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன? வருங்கால சந்ததியினர், வெல்லிங்டன் யார்? இர்வின் யார்? மின்டோ யார் என்றெல்லாம் கேள்வி எழுப்பினால், பெற்றோரும் ஆசிரியர்களும் பதிலளிக்கவேண்டிய தர்ம சங்கடத்துக்கு ஆளாகவேண்டும். மேலே குறிப்பிட்டவர்களெல்லாம் இந்தியாவை ஆண்டவர்கள். அவர்களிடம் இந்தியர்கள் அடிமைகளாக இருந்தனர் என்பதையெல்லாம் தெரிவிக்கவேண்டிய நிலை ஏற்படும். இதனால் குழந்தைகளின் சுயமரியாதை, தன்மதிப்பு பாதிப்புக்கு இலக்காகும் இளந்தலைமுறையின் தன்மதிப்பை உயர்த்துவதற்காகவே அந்நி யர்களின் சிலைகளை அகற்றினோம். ராமர் கோயில் நம் தன்மதிப்பின் இணையற்ற அடையாளம். அடிமைத்தனத்தை ஒழித்ததன் குறியீடு. வருங்கால சந்ததியினரிடம் இதைப் பதியவைக்க வேண்டியது அவசியம்.

‘யாருக்காக ராமர் கோயில் கட்டப்படுகிறது, யார் இந்த ராமர்?’ என்றெல்லாம் இன்னும் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், வடக்கு – தெற்கு பிரச்சினையையும் எழுப்புகிறார்கள். பூமி பூஜையின்போது ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கமும் ராமர் கோயிலும் இந்தப் பரிமாணங்களைப் பிரதிபலிக்குமல்லவா?
ஐந்து லட்சம் கிராமங்களை அணுக முடிவுசெய்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதில் அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மிஜோரம், திரிபுரா, அந்தமான், கட்ச் பகுதியிலுள்ள ரண் சதுப்பு உள்ளிட்டவையும் அடங்கும். இங்குள்ள மக்களெல்லாம் முழுமனத்துடன் பங்கேற்று வருகின்றனர். ராமபிரான் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை இதுவே பிரதிபலிக்கிறது. பல்வேறு மொழிகளில் ராம பிரானின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் தொகுத்து ஆலய வளாகத்தில் எழுப்ப உத்தேசிக்கப் பட்டுள்ள அருங்காட்சியகத்தில் அல்லது நூலகத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

பணி நிறைவடைய எவ்வளவு காலமாகும்? இது உணர்வு சார்ந்த பிரச்சினை. இதில் தங்களையும் ஐக்கியப் படுத்திக்கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். இதற்கான வாய்ப்பளிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கோயில் கட்ட அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. கோயில் கட்டுமானம் தொடர்பான சிந்தனை அமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. வல்லுநர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகி றோம். ஐ.ஐ.டிகளில் பணி யாற்றும் பேராசிரியர்கள், வல்லு நர்களுடன் கலந்தாலோசித்தது மட்டுமல்லாமல், தேசியத் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய எரிசக்தி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிறுவப்பட்டு எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாகக் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், மூன்றாண்டுகளுக்குள் கோயில் கட்டுமானப்பணி நிறைவடைந்துவிடும் என உறுதியாக நம்புகிறோம். அகழாய்வின்போது கோயில் கட்டப்படவேண்டிய பகுதியில் மண் இளக்கமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. வல்லுநர்களின் துணையோடு இந்த இளக்கத்தை இறுக்கமாக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை. மேலும், பூகம்பம் ஏற்பட்டால் அதைத் தாங்கக்கூடிய வகையில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம். அனைவரிடமும் கலந்தாலோசித்து, உகந்த முடிவை எடுத்து, அதை உறுதியாக நடைமுறைப்படுத்துவோம்.

விண்ணளாவ ராமர் கோயில் எழுப்புவது குறித்துத் தெரிவித்துள் ளீர்கள். அயோத்திக்கு உலகளா விய முக்கியத்துவம் கிடைக்க விருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அயோத்தி நகரை மேம்படுத்த அறக்கட்டளை எத்தகைய திட்டங்களை அமலாக்க உத்தேசித்துள்ளது?
நகர மேம்பாடு தொடர்பாக நாங்கள் எதையும் சிந்திக்க வில்லை. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை, அயோத்தியில் விண்ணளாவ ராமர் கோயிலை எழுப்ப வேண்டும் என்பது மட்டுமே. அயோத்தியை மேம்படுத்துவது அரசின் கடமை. இதில் அரசு நல்லபடியாகக் கவனம் செலுத்தி வருகிறது. இப்போது மூன்று ரயில்வே தடங்கள் உள்ளன. கூடுதலாக எட்டு ரயில்வே தடங்களை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவற்றையும் சேர்த்தால் ரயில் தடங்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும். மேலும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சர்வதேச விமான நிலையமும் இங்கு வருகிறது. இவற்றையெல்லாம் மேற்கொள்ள எங்களிடம் நிதிவசதி இல்லை. பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளைக் கொண்டு கோயிலை எழுப்புவது மட்டுந்தான் எங்களது பணி.