ராமர் ஆலய போராட்டத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தின் பங்கு

ஹிந்துக்களின் புனித பூமியாம் அயோத்தியில் இன்று ஸ்ரீராமபிரானுக்கு ஆலயம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக அரும்பாடு பட்டதில் விசுவ ஹிந்து பரிஷத்தின் பங்கு மகத்தானது. ஸ்ரீராமஜென்ம பூமியை மீட்டெடுக்க சுமார் 500 ஆண்டு காலமாக ஹிந்துக்கள் போராடி வந்திருக்கிறார்கள். ஆனால் 1984-ம் ஆண்டு விசுவ ஹிந்து பரிஷத், ஸ்ரீராமஜென்ம பூமி இயக்கத்தைத் தொடங்கிய பிறகுதான் அடுத்தடுத்து  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு பரபரப்பு ஆனது. ஸ்ரீராமஜென்ம பூமி பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் முழுமையாக கவனம் செலுத்தியது விசுவ ஹிந்து பரிஷத். பல ஆண்டு காலமாக நடத்திய சட்டப் போராட்டம், ஹிந்துக்களின் எழுச்சி போன்றவை காரணமாக வழக்கு முடிவுக்கு வந்து உச்ச நீதிமன்றம் அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி ஸ்ரீராமனுக்கே என்ற உன்னதமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு தொடங்கப்பட்டு இன்று அரை நூற்றாண்டுகள் கடந்த  நிலையில் ஸ்ரீராமஜென்ம பூமி பிரச்னைக்குத் தீர்வு காண முன் வந்த நாளிலிருந்துதான் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. ஏனெனில் ஸ்ரீராமஜென்ம பூமி மீட்பும் விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று இணைபிரியாத அளவுக்கு மாறிப் போனது.
அயோத்தியில் ஆலயம் அமைவதற்காக உத்தரப்பிரதேச மாநில அளவில் ஒரு சில ஹிந்துக்கள் ஸ்ரீராமஜென்ம பூமியை ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வந்தனர். ஆனால் அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை. 1983ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் ஹிந்துக்களிடையே அபரிமிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது விசுவ ஹிந்து பரிஷத்.  இந்த நேரத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசில் அமைச்சராக இருந்தவரும், ஸ்ரீராமஜென்ம விடுவிப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்தவருமான தாவுதயாள் கன்னா என்பவர் வி.ஹெச்.பி. இயக்கம் இந்தப் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டால் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார். 1984-ல் விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய துறவியர் பேரவை கூட்டத்தில்  இப்பிரச்னை பற்றி உரையாற்றினார்.
இதே ஆண்டு ஏப்ரல் 7,8 தேதிகளில் புதுடெல்லி விஞ்ஞான பவனத்தில் நடைபெற்ற துறவியர் பேரவை மாநாட்டில் அயோத்தி, மதுரா, காசி ஆகிய ஹிந்துக்களின் புனித தலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என முடிவெடுத்தனர். இதில் முதலாவதாக ஸ்ரீராமஜென்ம பூமியை மீட்க “ஸ்ரீராமஜென்ம பூமி விடுதலை வேள்விக் குழு” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக கோரக்ஷத பீடாதிபதி மஹந்த் அவைத்யனாத்ஜியும் தாவு தயாள் கன்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வி.ஹெச்.பி. சார்பாக ஸ்ரீராம ஜானகி ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டது. 1984 செப்டம்பர் 25-ம் தேதி பீகாரில் உள்ள ஸீதாமாடி என்ற ஊரிலிருந்து ரதம் புறப்பட்டது. மாநிலத்தின் கிராமங்கள், நகரங்கள் என எங்கும் உணர்ச்சிப் புயலை உருவாக்கிய வண்ணம் வலம் வந்த இந்த ரதம், அக்டோபர் 6-ம் தேதி அயோத்தியை அடைந்தது.  அக்டோபர் 7-ம் தேதி நாடெங்கிலும் ‘சங்கல்ப தினம்’ அனுசரிக்கப்பட்டது. அயோத்தி சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடி ஆலயம் அமைய சங்கல்பம் செய்து கொண்டனர். இது போன்ற நிகழ்ச்சிகள் அயோத்தி மட்டுமல்லாது பிரயாகை திரிவேணி சங்கமத்திலும், நாடெங்கிலும் நடைபெற்றன. அக்டோபர் 8-ம் தேதி ஸ்ரீராம ஜானகி ரதம் லக்னோவை நோக்கி பயணத்தைத் துவங்கியது.
கூடவே நூற்றுக்கணக்கான துறவியர்களும் பாத யாத்திரையாக நடந்து சென்றனர். நைமிசாரண்யம், சித்ரக்கூடம் வழியாக தலைநகர் டெல்லியை நோக்கி சென்றபோது அக்டோபர் 31-ம் தேதி பாரதப் பிரதமர் இந்திரா காந்தி  கொலை செய்யப்பட்டதை அடுத்து யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. ஓராண்டுக்குப் பின் மீண்டும் ரத யாத்திரை தொடர்ந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு ரதங்கள் உ.பி.யிலும், மூன்று ரதங்கள் பீகாரிலும் கிராமம் கிராமமாக பவனி வந்தன. விளைவு, ஹிந்துக்களின் எழுச்சிக் கனல் எல்லா கிராமங்களிலும் காட்டுத்தீ போல் பரவியது.
அகில பாரத அளவில் துறவியர் பேரவையின் இரண்டாவது மாநாடு முடிந்த பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் துறவியர் பெருமக்கள் சந்தித்து கோவில் கதவுகளை திறந்து விட்டு அந்த இடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடிவெடுக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட எம்.பி.க்களில் 50 பேர் மட்டுமே மனமுவந்து ஒப்புதல் தெரிவித்தனர். மற்றவர்கள் கட்சிக் கட்டுப்பாடு என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டனர்.
முதல் கரசேவை
1989-ல் அயோத்தியில் மிக உன்னதமான ஆலயம் அமைக்க நாடு முழுவதும் சுமார் 3,33,000 கிராமங்களில் இருந்து  ராம் சிலாக்கள் (ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட செங்கல்) பூஜிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  தமிழகத்தில் மட்டும் 14,560 கிராமங்களில் இருந்து ராம் சிலாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.  இதையடுத்து 1989 நவம்பர் 9-ம் தேதி ஸ்ரீராமஜென்ம பூமியில் அடிக்கல் நாட்ட நாள் குறிக்கப்பட்டது.
ஆனால் லக்னோ நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. இறுதியாக பேச்சுவார்த்தை மூலம் வி.ஹெச்.பி. எந்த இடத்தில் அடிக்கல் நாட்ட நிச்சயித்திருந்ததோ அங்கு அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 9ம் தேதி வனவாசி ஹிந்துக்கள் பாதுகாப்புடன் அடிக்கல் நாட்டுவதற்கான பள்ளம் தோண்டப்பட்டது.  நவம்பர் 10, வாரணாசி பண்டிதர்கள் குறித்துக் கொடுத்த நேரத்தில் மதியம் 1.35 மணிக்கு வெற்றிகரமாக அடிக்கல் நாட்டப்பட்டது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக 1990 அக்டோபர் 30-ம் தேதி முதல் கரசேவைக்கான நாள் குறிக்கப்பட்டது. “இது இறுதிப் போராட்டம். எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கவேண்டும்” என்றார் அடல்ஜி. கரசேவைக்கு குறிக்கப்பட்டிருந்த நேரம் காலை 9.30 மணி.  நாடெங்கிலும் இருந்து கரசேவகர்கள் பெரும் எண்ணிக்கையில் சரயு பாலத்தில் நுழைந்து அயோத்தி நோக்கி முன்னேறினர். காவல்துறையினருக்கும் கரசேவகர்களுக்கும் இடையே கடும் போராட்டம். தடியடி, கண்ணீர்ப் புகைவீச்சு, துப்பாக்கி சூடு என சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகினர். பலர் துப்பாக்கி குண்டுக்கு இரையாக, கரசேவை தற்காலிகமாக கைவிடப்பட்டது. அயோத்தியில் உயிர் நீத்த கரசேவகர்களின் அஸ்தி கலசங்கள் நாடெங்கும் எடுத்து செல்லப்பட்டு அஸ்தி யாத்திரை நடைபெற்றது. இந்த விஷயம் ஹிந்துக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பாக உருக் கொண்டது.
இதற்கிடையே மத்திய அரசு 1991ம் ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றியது. இதன்படி மற்ற வழிபாட்டு தலங்கள் மீது  ஹிந்து சமுதாயம் உரிமை கோரக் கூடாது என்றது. இதை விசுவ ஹிந்து பரிஷத் கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் அயோத்தி நீங்கலாக மற்ற சர்ச்சைக்குரிய ஸ்தலங்களுக்கே பொருந்தும் என்று சட்டம் கூறியது.
பாதுகா ரத யாத்திரை
1992, செப்டம்பர் 28ல் அயோத்தி அருகே நந்திகிராமத்தில் பூஜை செய்யப்பட்டு ராம சரண பாதுகைகள் நாடு முழுவதும் கொண்டு செல்லும் பிரமாண்ட நிகழ்வை வி.ஹெச்.பி. ஏற்பாடு செய்தது. இது ஹிந்துக்களிடையே  முன்னெப்போதும் இல்லாத அபரிமிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பல லட்சம் இளைஞர்கள் ஸ்ரீராமஜென்ம பூமியில் ஆலயம் அமைய கரசேவைக்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். உ.பி. அரசு கையகப்படுத்திய நிலம் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்காததால் 1992, டிசம்பர் 6. கரசேவைக்கான நாளாக நிர்ணயிக்கப்பட்டது.  ஏறத்தாழ இரண்டு லட்சம் கரசேவகர்கள் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் குவிந்தனர்.
பின்னர் அங்கு நடந்தது நாடறிந்த செய்தி.  8-ம் தேதி அசோக் சிங்கல் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை அரசு தடை செய்தது. ஆறு மாதங்களில் வி.ஹெச்.பி. தவிர மற்ற அமைப்புகளின் தடை செல்லாது என்றது பாஹ்ரி கமிஷன். இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு வி.ஹெச்.பி. மீதான தடையை நீடித்தது மத்திய அரசு. ஆனால் நீதிபதி கடுமையாக விமர்சித்து தடையை நீக்கினார். ஆனால் புத்தொளியுடன் பரிஷத் தனது பணிகளைத் தொடர்ந்தது.
மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை சம்பந்தப்பட்ட அயோத்தி விஷயம், உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. புராண ஆதாரங்கள், வரலாற்றுச் சான்றுகள், தொல்லியல் துறையின் ஆய்வுகள், நிதர்சனமான உண்மையின் அடிப்படையில் விவாதம் நடந்தது. இறுதியாக ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு 2019 நவம்பர் 9-ம் தேதி 14,000 சதுர அடி நிலம் ஸ்ரீராமபிரானுக்கே சொந்தம் என்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. கோடானுகோடி ராம பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை நிரூபணமாகி இன்று ஆலய கட்டுமானப் பணிகள் அமர்க்களமாக நடந்து வருகிறது.
 தொகுப்பு: ஸ்ரீபுரம் சுப்ரமணியன்