ராமர் ஆலய புனர் நிர்மாணத்தில் பாஜகவின் பங்கு

அயோத்தியில் மீண்டும் ஸ்ரீராமனுக்கு ஆலயம் என்பது பல நூற்றாண்டு கனவு. எப்போது ஆலயத்தை காண்பேன், காணாமலே கனவாக போய்விடுமோ என்று ஏங்கி மறைந்த, ஏங்கிக்கொண்டே இருந்த  உள்ளங்கள்  ஏராளம்! ஏராளம்!! இன்று அதற்கு விடிவு பிறந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆகஸ்ட் 5-, 2020ல் அதற்கு அடிக்கல் நாட்டி கோயில் நிர்மாணப் பணிகளையும்  தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுவாக அயோத்தியில் கோயில் நிர்மாணத்துக்கான பல்வேறு போராட்டங்களும், பா.ஜ.க.வின் வளர்ச்சியும் இரண்டறக் கலந்தது. 1980ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக ராமர் கோயிலுக்கான போராட்டங்களை முன்னெடுப்பது என்ற கோரிக்கையை வெளிப்படையாகவே அறிவித்தது. முதல் தேசிய தலைவரான, அடல் பிகாரி வாஜ்பாய், சங்க அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட ராமர் ஆலையத்தை கட்டுவோம் என்ற நீண்ட நெடிய போராட்டங்களுக்கு ஆதரவு தந்தார். இதில் 1984ம் ஆண்டு  விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கலால்  முன்னெடுக்கப்பட்ட ராமஜென்ம பூமி மீட்பு இயக்கம் இதில் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சட்ட மற்றும் தொடர்  போராட்டங்களின் பலனாக 1986ம் ஆண்டு வழிபாட்டுக்காக  சர்ச்சைக்குரிய இடத்தில் (பாபர் மசூதி வளாகம்) பூட்டப்பட்ட  கதவுகளைத் திறக்க  பைசாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது 1949 டிசம்பர். 22- 23: பாபர் மசூதி வளாகத்தினுள் திடீரென பிரதிஷ்டை செய்யப்பட, ராமர், சீதை, லெட்சுமண விக்கிரக வழிபாட்டை  தடுக்கும் விதமாக காங்கிரஸ்  அரசால் பூட்டப்பட்ட வளாகம் அது.1989ம் ஆண்டில், பாஜக பாலம்பூர் மாநாட்டில், “ராம் ஜன்ம பூமியை விடுவித்து, சர்ச்சைக்குரிய இடத்தில்  மிகப்பெரிய ராம ஆலயத்தை கட்டுவது என்றும் முடிவு எடுத்தது. இதில் 1984ல் 2 எம்பிக்களுடன் இருந்த பாஜக 1989 தேர்தலில் 85 தொகுதிகளில் வென்றது.
பாஜக தேசிய தலைவராக இருந்த எல்.கே. அத்வானி  1990ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி தனது வரலாற்று சிறப்புமிக்க ரதயாத்திரையை   குஜராத்தின் சோம்நாத்திலிருந்து அயோத்தி நோக்கி தொடங்கினார். இது மக்களிடையே உணர்வை தூண்டியது. ஜாதி பிரிவினையை துறந்து அனைத்து சமூகத்தினரும் ஹிந்துவாக ஒன்றிணைய வழிவகுத்தது. நாட்கள் செல்லச் செல்ல மக்கள் வெள்ளமென யாத்திரையில் குவிந்தனர். “கோயிலை அங்கு கட்டுங்கள்” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. எதிர்க்கட்சிகளை சித்தம் குலையச் செய்தது.
“ராமர் பெயரில் நாங்கள் கோயில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது, ராமர் பிறந்த அதே இடத்தில் கோயில் கட்டப்படும். நம்பிக்கை சார்ந்த விஷயத்தை முடிவு செய்வதில் நீதிமன்றத்திற்கு என்ன பங்குள்ளது? சர்ச்சைக்குரிய கட்டிடம் உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று இந்து நம்பிக்கையாளர்களுக்கு உள்ள நம்பிக்கை குறித்த விஷயத்தில் அரசு எப்படி தலையிடலாம்? எங்களை யார் தடுக்க முடியும்? எந்த அரசு தடுக்க முடியும்?” என்றார் எல்.கே. அத்வானி.மக்களின் பேராதரவை கண்டு அஞ்சிய பீகார் முதல்வராக இருந்த லல்லுபிரசாத் யாதவ் பீகாரில் யாத்திரையை தடுத்து நிறுத்தினார். அத்வானியை கைதும் செய்தார். ஆனாலும் கரசேவகர்கள் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியை நோக்கி சென்றனர்.
அம்மாநில முதல்வராக இருந்த முலாயம்சிங் யாதவ், கரசேவகர்கள் அனைவரையும் கைது செய்யவும், துப்பாக்கி சூடு நடத்தி கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டார். 3 நாட்கள் பெரும் யுத்த களமாகவே மாறிப்போனது. இதில் 20க்கும் அதிகமானோர்  உயிர் இழந்தனர்.  இந்நிகழ்வுகள் காங்கிரஸ், முலாயம் சிங் மற்றும் லல்லு பிரசாத் உள்ளிட்டோருக்கு பிற்காலத்தில் அரசியலில் பெரும் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.
உ.பி.யில் பாஜக தலைவர் கல்யாண் சிங் முதல்வர் ஆனார். 1991 பாராளுமன்ற தேர்தலில் ராஜிவ் காந்தியின் படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட அனுதாப அலைகளுக்கு மத்தியிலும் பாஜக 120 தொகுதிகளிலும், 1996ல் 161 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 1998, 1999 தேர்தலில் 182 இடங்களில் வென்று வாஜ்பாய் தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்தது.
ராமர் கோயிலுக்கான முயற்சிகள் மீண்டும் துவங்கின. 2002-2003ம் ஆண்டில்  காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்  சமரசப் பேச்சு, 2002 ஏப்ரலில்  லக்னொ  சிறப்பு அமர்வில்  வழக்கு விசாரணை துவக்கம். 2003 ஜனவரியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்  இந்திய தொல்லியல் துறையின் ஆய்வும், 2003 ஆகஸ்டில் மசூதியின் அடித்தளத்தில் மிகப்பெரிய கோயில் இருந்ததற்கான சான்றும் என்று தீர்வை நோக்கி வேகம் எடுத்த நிலையில், பாஜக ஆட்சி முடிந்து புதிதாக வந்த காங்கிரஸ் அரசு நிரந்தர தீர்வை நோக்கி மனமில்லாமல் மேலும் 10  வருடம்  இழுத்தடித்தது.
2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடியோ வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்தினார். பிரிவினை, கலவரக்காரர்கள்  ஒடுக்கப்பட்டனர். பல்வேறு அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. தீர்ப்பு எப்படியாகினும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹிந்து, இஸ்லாமிய தலைவர்களிடம் உணர்த்தப்பட்டது.
2019 நவம்பர் 9ம் தேதி  மசூதி உள்ள இடத்தில் ராமனுக்கு ஆலயம் கட்ட வேண்டும், மசூதிக்கு தனியிடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பும்  வந்தது. மக்கள் அமைதி காத்தனர். தீர்ப்பை அமைதியாக தலைவணங்கி ஏற்றுக் கொண்டனர். தீர்ப்பு எப்படி வந்தாலும் கலவரம் வெடிக்கும், இந்தியா பற்றி எரியும், என்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, காங்கிரசின் எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது.

– தமிழ்த் தாமரை வெங்கடேசன்