ஜம்மு – காஷ்மீரில் 90 திட்டங்களை துவக்கி வைத்தார் ராஜ்நாத் சிங்

சம்பா, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பு, 2,941 கோடி ரூபாயில் முடித்த 90 உட்கட்டமைப்பு திட்டங்களை, ஜம்மு – காஷ்மீரில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.

ஜம்மு – காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பிஷ்னா- – கவுல்பூர் – புல்பூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேவக் பாலம் மற்றும் மற்ற மாநிலங்களில் முடிக்கப்பட்டுள்ள திட்டங்களை, பா.ஜ.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கி வைத்தார்.

சம்பா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜம்மு – காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தேவக் பாலம், பாதுகாப்புப் படைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், துருப்புகள், கனரக உபகரணங்கள் மற்றும் நவீன வாகனங்களை முன்னோக்கி செல்லும் பகுதிகளுக்கு விரைவாக எடுத்துச் செல்ல, இந்த பாலம் வசதியாக இருக்கும்.

இந்த 90 திட்டங்களில், அருணாச்சல பிரதேசத்தில் 36; லடாக்கில் 26; ஜம்மு – காஷ்மீரில் 11; மிசோரமில் ஐந்து; ஹிமாச்சலில் மூன்று; சிக்கிம், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் தலா இரண்டு; நாகாலாந்து, ராஜஸ்தான், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தலா ஒன்று ஆகியவை அடங்கும்.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போது, அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, ஓரணியில் ஒன்றுபடுகின்றன. இது தான் நம் பலம்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, எல்லை பகுதிகளின் வளர்ச்சியில் உறுதியாக உள்ளது. எல்லை சாலைகள் அமைப்புடன் இணைந்து, நாடு பாதுகாப்பாக இருப்பதையும், எல்லை பகுதிகள் மேம்படுத்தப்படுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். தொலைதுாரப் பகுதிகளில் உட்கட்டமைப்புத் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பது, தற்போது புதிய இந்தியாவின் இயல்பாக மாறியுள்ளது.- ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர்

 

திட்டங்களை துவக்கி வைத்த பின், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: