வந்தே பாரத் ரயில்களில் பிளாஸ்டிக் பயன்பாடு ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

பிளாஸ்டிக் பயன்பாடு, ‘வந்தே பாரத்’ ரயில்களில் அதிகம் இருப்பதற்கு கவலை தெரிவித்த உயர் நீதிமன்றம், ரயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.  ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு விதித்த தடையை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

‘இந்த தடை உத்தரவு செல்லும்’ என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வு உத்தரவிட்டது. இதை மறுஆய்வு செய்யக் கோரி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் மனுத் தாக்கல் செய்தது. மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘கோவை, சென்னை பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், பாட்டிலுக்கு பதில், பாலிதீன் கவரில் பால் வாங்க, நுகர்வோர் விரும்புகின்றனர்’ என கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சென்னையில் திருமங்கலம் சாலை, குமாரசாமி நகர், திருநகர் பகுதிகளில் நடந்த ஆய்வில், 94 சதவீத நுகர்வோர், பாட்டிலில் ஆவின் பால் விற்பனைக்கு ஆதரவு அளித்துள்ளனர். சில பகுதிகளில், பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது தெளிவாகிறது. பாட்டிலுக்கு ஆதரவு அளித்தால், பால் விலை கூடிவிடும் என்ற எண்ணம், அவர்களுக்கு இருக்கலாம் என்பதால், அதிகாரிகள் இந்த பயத்தை போக்க வேண்டும். ரயில்வேயில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்துவதற்கு, எங்கள் அதிருப்தியை தெரிவிக்கிறோம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் விரைவில் ரயில்களில் கூட, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளதாக, எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே, ரயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, ரயில்வே துறை அறிக்கை அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பில், ரயில்வே முன்மாதிரியாக திகழ வேண்டும்.

காற்று, மழை நீரில் அடித்து செல்லப்படும் பிளாஸ்டிக், ஆறு மற்றும் நீரோடைகளில் கலக்கிறது. நிலத்துக்குள் செல்ல விடாமல், தண்ணீரை பிளாஸ்டிக் அடைக்கிறது. இதனால், கோடை காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ‘நீர் இல்லை என்றால் உலகம் இல்லை’ என்று, 2,000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியது, தற்போது உண்மையாகி வருகிறது.

எண்ணெய், பருப்பு, பழ வகைகள், பிரெட், பிஸ்கட் என நுகர்பொருள்கள், பிளாஸ்டிக்கில் வருகின்றன. இது, உடலுக்கு கேடு விளைவிக்கும். தினசரி பயன்படுத்தும் பல் துலக்கும் பிரஷ், சீப்பு, பேனா, பிளாஸ்டிக் பொருளில் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற, மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அரசு எடுக்கும் நடவடிக்கை என்பது, நத்தை வேகத்தில் உள்ளது. காய்கறி, பழ கடைகள்,சிறு கடைகளில் பிளாஸ்டிக் பை, கேரி பேக் பயன்படுத்தப்படுகிறது. கோவில்களை சுற்றிய கடைகளில், ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணையை, அக்டோபர் 9க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.