உயிர் பறித்த பொங்கல் பரிசு

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு பொங்கலை முன்னிட்டு ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கமிஷனுக்காக வெளிமாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட, தரமில்லாத 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருப்பதாக, மக்கள் சமூக ஊடகங்களில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தனர். அவ்வகையில், திருத்தணி நியாய விலைக் கடையில், நந்தன் என்ற முதியவருக்கு அளிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இறந்து கிடந்தது. இந்த புகைப்படத்தை நந்தன் பதிவிட்டார். இதனால், எதிர்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால், புகார் அளித்த நந்தனுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த ரௌடிகள் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளனர். தமிழக அரசு மீது களங்கம் விளைவிப்பதாக நந்தன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நந்தனின் குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் நந்தனும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்நிலையில் பெட்ரோல் ஊற்றி நந்தனின் மகன் குப்புசாமி தீக்குளித்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோதும் குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளியில் பல்லி இருப்பதாக புகார் கூறினால், அலட்சியமாகவும், அஜாக்கிரதையாகவும் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கூறுபவர்கள் மீது காவல்துறையை ஏவி விடுவது நியாயமா? இப்படி பயமுறுத்தினால், அடுத்து வேறு யாரும் அரசை எதிர்த்து கேள்வி கேட்க பயப்படுவார்கள் என அச்சுறுத்துவதற்குதே இப்படி தி.மு.க செய்வதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். குப்புசாமியின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.