காங்கிரசின் தேசப்பற்று

பாரதத்திற்கு எப்போதும் ஊறு விளைவித்து வரும் எதிரி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவை காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் அவர்களது சில கூட்டணி கட்சிகளும் ஆதரிப்பது ஒன்றும் புதிது அல்ல. இது அவர்களின் தேசப்பற்றின் ஆழம் எவ்வளவு என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதனை நிரூபிக்கும் மற்றொரு நிகழ்வு உங்கள் பார்வைக்கு:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாய் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், “பர்வேஸ் முஷாரப், முன்னாள் பாகிஸ்தான் அதிபர், அபூர்வ நோயால் இறந்தார். ஒரு காலத்தில் பாரதத்தின் அசைக்க முடியாத எதிரி அவர். அவர் 2002 முதல் 2007 வரை அமைதிக்கான உண்மையான சக்தியாக மாறினார். நான் அவரை அந்த நாட்களில் ஐ.நாவில் ஆண்டுதோறும் சந்தித்தேன். அவர் புத்திசாலியாகவும், ஈடுபாட்டுடனும், அவரது செயல்திட்டம் சார்ந்த சிந்தனையில் தெளிவாகவும் இருப்பதைக் கண்டேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.

சசி தரூரின் இந்த சமூக வலைதளப் பதிவுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, “கார்கில் போரை நடத்தியவர், சர்வாதிகாரி, தலிபான் மற்றும் ஒசாமா பின்லேடனை சகோதரர்கள் மற்றும் ‘வீரர்கள்’ என்று கருதியவர், கொடூரமான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் பர்வேஸ் முஷாரப், கார்கில் போரில் இறந்த தனது சொந்த ராணுவ வீரர்களின் உடலைக் கூட திருப்பியெடுக்க மறுத்துவிட்டவர். காங்கிரஸால் பாராட்டப்பட்டது! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஒரு காலத்தில் முஷாரப், ராகுல் காந்தியை ஒரு ஜென்டில்மேன் என்று புகழ்ந்தார், அதனால்தான் முஷாரப்பை காங்கிரஸ் விரும்புகிறதா?” என கேள்வி எழுப்பியதுடன் சட்டப்பிரிவு 370 முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பலகோட் வரை காங்கிரஸின் சந்தேகம் பாகிஸ்தானின் குரலை எதிரொலிக்கிறது. முஷாரப்பை வாழ்த்தும் அதே காங்கிரஸ் நமது ராணுவத் தளபதியை தெருவில் சண்டை போடுபவர் என்று அழைத்தது. இது காங்கிரஸ்” என்று கூறினார்.

தனது மற்றொரு டுவீட்டில், முஷாரப் தனது மகனுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தது, முஷாரப்பின் மனைவி, சகோதரர் மற்றும் மகனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் டெல்லி பயணத்தில் இருந்தபோது மதிய உணவிற்கு அழைத்தது பற்றி பேசும் பழைய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒசாமா பின்லேடனையும் தலிபான்களையும் புகழ்ந்த பர்வேஸ் முஷாரப், ராகுல் காந்தியையும் புகழ்ந்து பாடியுள்ளார். அவரை ஒரு ஜென்டில்மேன் என்று அழைத்து அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். கார்கில் போரை நடத்தியவரும் பயங்கரவாதத்தின் ஆதரவாளருமான பர்வேஸ் முஷாரப்பை சசி தரூர் புகழ்வதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். பெருமூச்சு விடுங்கள்” என்று ஷெஹ்சாத் பூனவாலா கூறினார்.