ஆமாம்! நாங்க தமிழ்ச் சங்கி தான்- 3

வேள்வி புரிந்த பழந்தமிழர்

வேதத்தில் முக்கியமாகக் கூறப்படும் வேள்விச் சடங்குகளை முற்காலத் தமிழர்கள் வெறுக்கவில்லை, முனைப்போடு மேற்கொண்டார்கள். வேள்வி என்பதற்கு வேண்டியது நிறைவேற விரும்பிச்செய்வது என்று பொருள். வடநாட்டு மன்னர்களான கனக, விஜயர்களின் தலையிலே இமயமலைக் கல்லைச் சுமந்து வரச்செய்து தெற்கிலே கண்ணகிக்குச் சிலை வைத்து வணங்கிய சேரன் செங்குட்டுவனின் முன்னோர்கள், வேள்விச் சடங்குகளை விருப்பத்தோடும், பொருள் உணர்ந்தும் செய்துள்ளார்கள். இதனை எட்டுத்தொகை நூலாகிய பதிற்றுப்பத்து எடுத்துரைக்கிறது. அதன் மூன்றாம் பத்துப் பாடல்களைப் பாடிய புலவர் பாலைக் கௌதமனார், சேரன் பல்யானைச் செல்கெழுகுட்டுவனை இவ்விதம் புகழ்ந்துரைத்துள்ளார்:

சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சமென்று ஐந்துடன் போற்றி அவைதுணை ஆக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக் காலை அன்ன சீர்சால் வாய்மொழி உருகெழு மரபின் கடவுள் பேணியர் கொண்ட தீயின் சுடர்எழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி (பாடல் 21) என்று புலவர் குறிப்பிடுகிறார்.

சொல் இலக்கணம்,பொருள் இலக்கணம், சோதிடம்,வேதம், நெஞ்சுக்குப் பொருந்திய ஆகமம் ஆகிய ஐந்தையும் போற்றி, அவற்றின் துணை கொண்டு, எந்த உயிர்களுக்கும் தீங்கு சூழாது, விளக்கத்துடன் கூடிய கொள்கைகளைப் பின்பற்றி, கதிரவனைப் போன்ற வாக்குத் தவறாத நேர்மையைக் கடைப்பிடிக்கின்ற, முன்னோர் காட்டிய மரபுப்படி கடவுளைப் பேணுகின்ற முனிவர்களாகிய அந்தணர்கள் வளர்க்கின்ற வேள்வித் தீயின் சுடர் எழும்போதெல்லாம் அதிலே ஆவுதி (ஆகுதி) இடப்படுகின்றது. எப்படிப்பட்ட ஆவுதி தெரியுமா? அதனைச் செய்பவர்கள் விரும்புகின்றவற்றை மெய்யாக்குகின்ற பெரிய பலன்களைத் தரக்கூடிய ஆவுதியாம். இந்தப் பாடலுக்குப் பெயரே அடுநெய்யாவுதி என்பதுதான். வேள்விக்கு இதைவிட விளக்கம் தேவையா? இதேபோல் பதிற்றுப்பத்தின் ஆறாம் பாடலைப் பாடியுள்ள பெண்பாற் புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார், பாட்டுடைத் தலைவனாகிய சேரமன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழ்ந்துரைக்கும்போது, பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈத்து வான் வரம்பன் எனப் பேர் இனிது விளக்கி என்கிறார். அறச் செயல் புரிகின்ற பார்ப்பனர்களுக்கு கபிலை எனப்படும் பழுப்பு நிறமுடைய சிறந்த பசுக்களையும், குடநாட்டிலே ஓர் ஊரையும் தானமாகக் கொடுத்ததன் மூலம் வானில் வாழும் தேவர்களை திருப்தி செய்ததால், வான்வரம்பன் (வானத்தை எல்லையாகக் கொண்டவன்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளான் சேரலாதன் என்கிறார் நச்செள்ளையார். இந்த வான்வரம்பன் வழி வந்தவர்கள்தான் வானவராயர் எனப்படும் வானவரையர்கள்.

வேதம் ஓதுகின்ற, அறத்தோடு வாழ்கின்ற அந்தணர்களுக்கு அக்காலத் தமிழர்கள் எத்தகைய மதிப்பு அளித்தனர் என்பதை, வேளிர் மரபைச் சேர்ந்த மன்னன் செல்வக் கடுங்கோ வாழி ஆதனைப் பாடிய ஏழாம் பத்தில் கபிலர் எடுத்துரைக்கிறார். வாழி ஆதனைப் பார்த்து, பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே (பாடல் 63) என்கிறார். அதாவது, யார்க்கும் அஞ்சாத, எவருக்குமே தலைவணங்காத மாவீரன் வாழி ஆதன், மறையோதும் பார்ப்பனர்களுக்கு மாத்திரமே பணிவோடு தலைவணங்குவான் என்கிறார் கபிலர். எட்டாம் பத்திலே சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை, அரிசில் கிழார், கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை (பாடல் 74) என்று பாராட்டுகிறார். அருமறை குறித்த விளக்கங்களை நன்கு கேட்டறிந்து, அதன் முறை தவறாது வேள்விகளைச் செய்தானாம் இரும்பொறை.

மதுரைக் காஞ்சியில் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்துபாடும் மாங்குடி மருதனார், நெடுஞ்செழியனின் முன்னோராகிய பெருவழுதி, பல யாகங்களை நடத்தியவன் என்பதை, பல் சாலை முது குடுமியின் நல் வேள்வித் துறை என்று குறிப்பிடுகிறார். இதே பாடலில், அன்புள்ளம் கொண்டவர்களும் பெரியோர்களுமான அந்தணர்கள் உறைவதற்காக குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்தணர் பள்ளிகள் மதுரையில் நிறைந்திருந்தன என்பதை “அன்புடை நெஞ்சின் பெரியோர் மேஎய் இனிதின் உறையும் குன்று குயின்றன அந்தணர் பள்ளி” என்ற வரிகளின் மூலம் மருதனார் நமக்குப் புலப்படுத்துகிறார்.

புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப் படையில், கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து என்ற வரிகள் இடம்
பெற்றுள்ளன.வேதம் அறிந்த அந்தணர்கள் தங்களது அரிய கடமையாகிய வேள்வியைச் செய்து அதன் பெருமையைப் பொறித்து வைத்துள்ள தூண் என்று இதற்குப் பொருள்.சிறுபாணாற்றுப் படையில் புலவர் நல்லூர் நத்தத்தனார், ஒய்மான் நாட்டு மன்னன் நல்லியக்கோடனின் தலைநகரை, அந்தணர் அருகா அருங்கடி வியல் நகர் என்று புகழ்ந்துரைக்கிறார். அந்தணர்கள் எண்ணிக்கைக்கு குறைவே இல்லாத, அருமையான கட்டுக்காவல் நிறைந்த நகரம் என்று இதற்குப் பொருள்.
வேதம் ஓதிடும் பார்ப்பனர்களுக்கு அக்காலத் தமிழ்ச் சான்றோர்கள் எத்தனை மதிப்பளித்தார்கள் என்பதற்கு ஆவூர் மூலங்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலே (எண் 166) மிகச்சிறந்தசான்றாகும்.

போரிலே வெற்றிபெற்ற அரசர்களைப் புலவர்கள் புகழ்ந்துபாடும் புறத்திணைக்கு வாகைத்திணை என்று பெயர். ஆனால், ஆவூர் மூலங்கிழார் யாரைப் புகழ்ந்துவாகைத் திணையில் பாடினார் தெரியுமா? பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பானைப் பற்றி. பார்ப்பன வாகை என்ற துறையில் அமைந்த இந்தப் பாடலில், மெய்போல் பொய் பேசும் புறச்சமயத்தவர்களை வாதிலே புறமுதுகிட்டோடச் செய்து, எண்ணற்ற வேள்விகளைப் புரிந்து, விருந்தினர்களை உபசரிக்கும் விண்ணந்தாயனின் மேம்பட்ட நிலையை என்றும் காண்போம் என வியந்து பாராட்டுகிறார் புலவர்.தமிழ்க் கடவுள் என்று சிறப்பிக்கப்படும் முருகப் பெருமான் மீது நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் ஆறுமுகப் பெருமானின் ஒரு முகம் என்ன செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா?

ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்குமே என்கிறார் நக்கீரர். அதாவது மந்திர விதிமுறைகளில் பிசகாது, மரபுப் படி அந்தணர் நடத்துகின்ற வேள்வியை சுப்ரமணியக் கடவுளின் ஒரு முகம் விரும்பி ஏற்கிறதாம். அதுசரி, ஆரியர்கள் கூறுகின்ற வடநாட்டு ஸ்கந்தன் வேறு, தமிழர்களின் தென்னாட்டுக் கந்தன் வேறு என்கிறார்களே, அது உண்மையா? அடுத்த அத்தியாயத்தில் அலசுவோம்.
– தொடரும்