ஆர்.எஸ்.எஸ் இனி…

புதிய புதிய வேலைகள் வருகின்றன. புதிது புதிதாக திட்டங்கள் தீட்ட வேண்டியுள்ளது. உதாரணமாக ஆக்சிஜன் பிரச்சனை வந்த பொழுது நாம் அதனை மிகச் சிறப்பாக எதிர்கொண்டோம். ஸ்வயம்சேவகர்களின் தொண்டுள்ளம், கடமையின் மீதான பற்று ஆகியவை புதிய வழிகளைக் கண்டுபிடித்து வேலை செய்வதற்கு நமக்கு உத்வேகம் அளிக்கிறது. இதன் பின்புலத்தில் சங்கத்தின் இத்தனை ஆண்டு கால தவம், வேலை முறை ஆகியவை உள்ளன. வருங்காலத்தில் நாம் 3-4 விதமான வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது.

பெருந்தொற்றால் குடும்ப / தேச பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்களில் வருமானம் ஈட்டுகிற முக்கியமான நபர் அகால மரணம் அடைந்ததால் அந்த வீட்டிலுள்ள விதவைப் பெண்கள், சிறு குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் மனோதிடம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக மனநல ஆலோசனை (counselling) அளிக்க வேண்டும். தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க, கதை மூலம் பண்புப் பதிவுகளை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இணையவழி மூலம் அனைத்தையும் கற்பித்துவிட முடியாது. சிறிய குழுக்கள் ஏற்படுத்தி கல்வி கற்பிப்பதற்கும் பதிவுகளை ஏற்படுத்துவதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும். இதற்கு பெரிய அளவில் திட்டம் தேவை.

அடுத்து கொரானாவின் மூன்றாவது அலை பற்றிய பயம். மூன்றாவது அலை வரக்கூடாது என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். ‘வெயிட்டிங் பார் கோடோ’ (waiting for godot) என்று ஓர் ஆங்கில நாடகம். அதன் கதாபாத்திரங்கள் அனைவரும் கோடோவுக்காகக் காத்திருக்கின்றனர். அது மனிதனா, மிருகமா, தண்ணீரா, புயலா, மனிதனாக இருந்தால் ஆணா, பெண்ணா என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் அது வந்தால் என்ன செய்யும், என்ன சொல்லும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்தனர். அதைப் போலத்தான் மூன்றாவது அலை பற்றிய நமது பயமும். குழந்தைகளை பாதிக்கும் என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். பெரும்பான்மையானோர், தடுப்பூசி இதற்கு சரியான தீர்வாக அமையும் என்று கூறுகிறார்கள். கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பிரச்சினை சிறிது சரியாவது போல் தோன்றியது ஆனால் நமது எச்சரிக்கையின்மையால் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. பிரச்சினைகளை எதிர்கொள்ள பயிற்சி தேவை. லட்சக்கணக்கானவர்களுக்கு பயிற்சி அளித்து, திறமையானவர்களைக் கொண்டு நாம் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வெற்றி காண வேண்டியுள்ளது.

நமது தினசரி வேலை பாதிக்கப்பட்டுள்ளது. ஷாகா, பைட்டக், சம்பர்க்க (தொடர்பு), ப்ரவாஸ் (சுற்றுப்பயணம்) ஆகியவை சரிவர நடக்கவில்லை. இரண்டு வருடங்களாக சங்க சிக்ஷா வர்க நடக்கவில்லை. சகஜமான சம்பர்க்க, ஒருவருக்கொருவர் சந்திப்பது, அளவளாவுவது ஆகியவை நடப்பதில்லை. கடந்த ஆண்டு நமது சங்க விழாக்களை ஆன்லைன் மூலம் நடத்தியுள்ளோம். தினசரி வேலை நடக்கத்தான் வேண்டும். நிதானமாக மிகுந்த எச்சரிக்கையோடு நாம் இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும். இதற்கு சரியான திட்டமிடல் அவசியம். மனித நிர்மாணம் தடைபடக் கூடாது. சமுதாயத்தின் உள்ளார்ந்த சக்தியை, திறனை வளர்க்க வேண்டும். பாலர்களுக்கு ஆன்லைன் ஷாகா நடத்துவது எளிதல்ல. மற்ற வயதினருக்கு நாம் நடத்த முடியும். பௌத்திக் நிகழ்ச்சிகள் நடத்தலாம். சம்பர்க்க, பிரசார் ஆகிய துறைகளைச் சேர்ந்தோர் பல உத்திகளைக் கையாண்டு அதிகமான நிகழ்சிகளை நடத்தியுள்ளனர். ஆயினும் சங்கஸ்தானத்தில் சந்தித்து ஆத்மார்த்தமான நட்பு வளர்த்தல், நமது சுய வளர்ச்சி, தேசிய; சமுதாய எண்ணம் மேம்படுதல் ஆகியவை இல்லாது போயிருக்கிறது. சிறிது சிறிதாக அதனை நாம் சரிப்படுத்தியாகவேண்டும்.

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசும்போது, “நாம் கலாச்சாரத்தை புனர்நிர்மாணம் செய்வோர். தொழிற்சாலை நடத்த வரவில்லை; கலாசாரத்தின் திறன் ஒழுக்கத்தின் அடைப்படையில் அமைகிறது; பொருளாதார அடிப்படையிலோ அரசியல் அடிப்படையிலோ அல்ல; ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே நமது வளர்ச்சி ஏற்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனையே நமது புனித நூல்கள், சாதுக்கள், மத சம்பிரதாயங்கள் அனைத்தும் கூறுகின்றன. நாம் இந்த விஷயத்தினை மண்டல் வரை, கிராமங்கள் வரை எடுத்துச் செல்ல வேண்டும்.ஒரு மூன்றாண்டுகள் நம்முடைய வேலை விஸ்தரிப்பு, வளர்ச்சி இவை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும். மதன்மோஹன் மாளவியா, ‘க்ராமே க்ராமே சபா கார்யா; க்ராமே க்ராமே கதா சுபா;। பாடசாலா மல்ல சாலா ப்ரதி பர்வ மஹோத்ஸவ’ என்று கூறியுள்ளார். சங்க வேலை இவை அனைத்தையும் ஒருசேர வழங்கும். பாடசாலை என்பதும் உடற்பயிற்சி சாலை என்பதும் சங்க ஷாகாவே. பண்புக் கதைகள் மூலம் நல்ல பண்புப் பதிவுகளை ஏற்படுத்துவது; பரஸ்பர உதவி ஆகியவற்றையே வலியுறுத்துகிறார்.

இதற்காக தங்களது வாழ்க்கையையே சமர்ப்பணம் செய்தவர்கள் பலர் உள்ளனர். நமது செயல்முறையை இன்னும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தொடர்புகள் விட்டுப் போகவில்லை. நெருக்கடி நிலை (emergency) காலத்தில் ஷாகா நடக்கவில்லை; ஆயினும் நெருக்கடி நிலை முடிந்தவுடனேயே மீண்டும் தொடங்கி சங்க வேலையை நாம் மிக நல்ல முறையில் வளர்த்திருக்கிறோம். நம்முடைய சிறந்த தொடர்பு மூலமாக நித்ய ஸித்த சக்தி (என்றும் ஆயத்தமான சக்தி) உயிர்ப்புடன் இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு நமது சங்க வழிமுறை கைகொடுக்கும். அவ்வப்போது தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு சமுதாயத்திற்கு வழி காட்ட வேண்டும். சிற்சில குறைபாடுகள் ஏற்படலாம். அடுப்புக்கரி விற்பனை செய்யும் பொழுது நமது கையிலும் கரிபிடிக்கத்தான் செய்யும். கொரோனா போன்றே மற்ற வைரஸ்களாலும் நாம் பாதிக்கப்படக் கூடாது. சுயநலம், ஊழல், புகழாசை, பதவி மோகம் ஆகியவையே அந்த வைரஸ்கள். நமக்குள் இவை ஊடுருவாமல் காக்க வேண்டும். சமுதாயத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை போன்ற வைரஸ்கள் பரவாமல் காக்கவேண்டும்.

தினசரி ஷாகா என்ற நமது வேலை முறையை உறுதிப்படுத்தி அதிலேயே மூழ்கி ஆனந்தம் அனுபவித்து அந்த வழியிலேயே நாம் செல்ல வேண்டும். இது நமது இயல்பு. இதை இன்னும் சிறப்பாக செய்வதற்கு திட்டமிடுதல் வேண்டும். பலரோடு கலந்து ஆலோசனை செய்து நமது ஸ்வயம்சேவகர்களின் ஆளுமை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் இயல்பாகவே சங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரச்சினைகளை நல்ல முறையில் எதிர்கொள்ள நாம் திறமை வாய்ந்தவர்களாக வேண்டும்.

நித்ய ஸித்த சக்தியை நல்ல முறையில் வளர்த்து சமுதாயத்தை, தேசத்தை முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடச் செய்ய வேண்டும். இதற்கு நமது ஸ்வயம்சேவகர்களின் திறமையும் ஆன்ம பலமும் அதிகரிக்க வேண்டும். இவ்வழியில் நாம் தொடர்ந்து செல்வோம். இறைவனின் அருள் நமக்குக் கிட்டும். (நாடு தழுவிய அளவில் கார்யகர்த்தர்களும் ஸ்வயம்சேவகர்களும் ஆன்லைனில் கேட்டுப் பயன் பெற்ற பொதுச் செயலர் தத்தாரேய ஹொசபலேவின் பேருரையிலிருந்து, ஜூன் 27 ஞாயிறு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத்
கலந்துகொண்டார்).
தமிழில்: கணபதி சுப்பிரமணியன்