மியான்மர் பயங்கரம்

பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியான்மர், 1948ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது முதல் பெரும்பாலான காலம் ராணுவ ஆட்சியில்தான் இருந்துள்ளது. 2010ல் ராணுவத்தின் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015ல் தேர்தல் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.

அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி  அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரில் கைப்பற்றியது ராணுவம். சமீபத்தில் பாகோ நகரில், ராணுவ ஆட்சியை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், என்பதுக்கும் அதிகமானோர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதுவரை அறுநூறூக்கும் அதிகமானவர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என ‘அசிஸ்டென்ஸ் அசோசியேஷன் ஃபார் பொலிடிகல் பிரிசனர்ஸ்’ என்ற ஒரு கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. ‘இது இனப்படுகொலை போன்றது. அவர்கள் ஒவ்வொரு நிழலையும் சுடுகிறார்கள்’ என மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் யே ஹடுட் கூறியதாக, மியான்மர் நவ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல பொதுமக்கள் இந்த ராணுவ வன்முறை நடவடிக்கைகளுக்கு பயந்து பாரதத்திற்கு தப்பி வரும் சூழலும் நிலவுகிறது.

மியான்மரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஐக்கிய நாடுகள் சபைக்கான மியான்மர் தூதரும், ‘மியான்மர் ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும், ஆயுத விநியோகத்தை தடுக்க வேண்டும்’ என ஐ நா பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளுக்கு, வேண்டுகோள் விடுத்துள்ளனர். மியான்மர் நாட்டு அரசு செயலிழப்பின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா கூட்டங்களில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ‘மியான்மர் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளால் அங்கு ஆட்சியே செய்ய முடியாத நிலை உருவாகலாம்’ என சர்வதேச நெருக்கடி குழுவின் மூத்த ஆலோசகர் ரிச்சர்ட் ஹார்சே கூறியுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு தீர்வுக்கு முயற்சிக்க கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், மியான்மருக்கு அதிகமாக ஆயுத சப்ளை செய்யும் ரஷ்யாவும் சீனாவும் அங்கு பெருமளவு முதலீடுகளையும் செய்துள்ளன. இந்த காரணத்தால் அவை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பேச்சுவார்த்தையை திட்டமிட்டே தடை செய்யும் விதத்தில் தள்ளிப் போடுகின்றன என ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோசப் குஹெல் தெரிவித்துள்ளார்.