அது ஒரு வாட்ஸ்அப் குழுமம். பெரும்பாலும் ஒத்த கருத்துடையவர்கள். கடந்த ஆண்டு ஊரடங்கு நேரத்தில் சமையல், யோகா என கற்றுக் கொண்டது அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருப்போம். அப்பொழுது தான் ஒரு நண்பர் ஆரம்பித்தார், “அகோபிலம் போகலாமா?”. ஒவ்வொருவராக அதைப் பற்றி பேசினோம். ஊரடங்கு தளர்ந்த பிறகு அகோபிலம் செல்ல திட்டமிட்டோம். போனால் எங்கே தங்குவது, என்னென்ன பார்ப்பது என்றெல்லாம் அவ்வப்போது விவாதித்தோம்.
பாரத நாட்டைப் பொறுத்தவரை புனித தலங்கள் ஏராளம். கால் வைக்கும் இடமெல்லாம் புனிதம் தான் இங்கே. சில தலங்களை வாழ்க்கையில் ஒருமுறை காண்பதே பிரமிக்கத்தக்க விஷயம். அத்தகைய தலங்களில் அகோபில மலை ஒரு முக்கியமான தலம். இங்கு செல்ல குருவருளும், திருவருளும் மட்டுமல்ல, நல்ல உடல்வாகும் வேண்டும்.சென்னையில் இருந்து அகோபிலம் சுமார் 350 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் கர்னூல் வரை ரயிலில் சென்று அங்கிருந்து அல்லகட்டா வழியாக காரில் அகோபிலம் செல்வது ஒரு வழி. திருப்பதி, கடப்பா வழியாக அகோபிலம் சென்றடைவது மற்றொரு வழி. நாங்கள் தனி பேருந்து ஏற்பாடு செய்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை சிற்றுண்டிக்குப் பிறகு கிளம்பி இரவுக்குள் அகோபிலம் அடைந்து விட்டோம். இடையே, திருப்பதியைக் கடந்த பிறகு வோண்டிமிட்டா என்ற ஊரில் அழகிய கோதண்டராமர் வீற்றிருக்கிறார். அவரையும் தரிசித்து விட்டு அகோபிலத்துக்கு வந்து சேர்ந்தோம்.
மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமான நரசிம்ஹ அவதாரம் நிகழ்ந்த இடமாக அகோபிலமலை கருதப்படுகிறது. அதே போல, அகோபிலத்தில் இருக்கும் மடம் தமிழகத்தில் இருக்கும் வைஷ்ணவர்களுக்கு புனித இடமாக இருக்கிறது. அந்த மடத்தை அலங்கரிக்கும் ஜீயர் சுவாமிகள் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெரும்பாலானோருக்கு குல குருவாக கருதப்படுகிறார். தற்போது 46-வது அழகியசிங்க ஜீயர் சுவாமிகள் மடத்தை அலங்கரிக்கிறார். சனிக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் மடத்திற்கு வருகிறார்கள். திருமங்கை ஆழ்வார் அகோபிலத்தைக் குறிப்பிட்டு பத்து பாசுரங்களைப் பாடியுள்ளார். ஸ்ரீ ராமானுஜரும் அகோபிலத்துக்கு வருகை புரிந்துள்ளார்.
அகோபிலத்தில் 5 கி.மீ. சுற்றளவில் நவ நரசிம்மர்கள் வீற்றிருக்கிறார்கள். அது தவிர, கீழ் அகோபிலத்தில் பிரகலாத வரதராக நரசிம்மர் காட்சியளிக்கிறார். இங்கு விஸ்வரூப தரிசனத்தை சேவிக்க பக்தர்கள் குவிகிறார்கள்.எங்கள் குழுவினர், உக்ர ஸ்தம்பம் வரை செல்பவர்கள் ஒரு பிரிவாகவும், அதைத் தவிர்த்து மற்ற இடங்களுக்குச் செல்பவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தோம். உக்ர ஸ்தம்பம் செல்லும் வரை உடல்நிலை தாங்குமா என்ற எண்ணத்தில் நான் இரண்டாவது பிரிவுடன் இணைந்து கொண்டேன். நவ நரசிம்ம தரிசனத்தில் உக்ர ஸ்தம்பம் இல்லை. ஆனால், நரசிம்மர் தூணில் தோன்றிய இடமாக இந்த மலை உச்சி கருதப்படுகிறது. இந்த இடத்தை உற்று நோக்கினால் ஆக்ரோஷமான நரசிம்மர் உருவம் தெரிகிறது. உக்ர ஸ்தம்பம் அருகிலேயே பிரகலாதன் மேடு இருக்கிறது.
பிரகலாதன் இங்கிருந்து தான் தூணில் தோன்றிய நரசிம்மரை தரிசித்ததாக ஐதீகம். இந்த இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால், இறையருளுடன் அசாத்திய உடற் பயிற்சியும் இருந்தாக வேண்டும். கீழ் அகோபிலத்தில் இருந்து 20 நிமி ஷங்களுக்குள் கராஞ்ச நரசிம்மர் கோயில் வந்துவிடும். அதுவரை நமது வாகனங்களில் செல்ல அனுமதியுண்டு. அங்கிருந்து நவ நரசிம்மர்கள் தரிசனம் தொடங்குகிறது. அதை தரிசித்துவிட்டு மேல் அகோபிலத்தில் இருக்கும் அகோபில நரசிம்மர் கோயில் வரை ஜீப் மூலம் பயணிக்கலாம். ஆக்ரோஷமாக இருந்த நரசிம்மரை பிரகலாதன் சாந்தப்படுத்தியது அந்த இடத்தில் தான்.
அந்தக் கோயிலை தரிசித்த பிறகு மலை மீது ஏற வேண்டும். தொடங்குமிடத்தில் வாடகைக்கு குச்சி கிடைக்கும். (திரும்ப வந்து சேரும்போது அதை ஒப்படைத்துவிட வேண்டும்) குச்சியைத் தாங்கியபடி மலையேறலாம். மலையில் குரங்குகளின் அட்டகாசத்தில் இருந்து மீளவும் பயன்படும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் மாலோல நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. ஒன்றரை மணிநேரத்திற்குள் இந்தக் கோயிலை அடைந்து விடலாம். இது 108 திவ்விய தேசங்களில் ஒன்று. இந்த மாலோல நரசிம்ம சுவாமியின் உற்சவமூர்த்தியை அகோபில ஜீயர்கள் வசம் வைத்திருந்து தினசரி பூஜித்து வருகிறார்கள்.
அதன் படிக்கட்டுகளில் இறங்கி மலைப் பாதையில் மேலும் நடக்கத் தொடங்கினால் குரோதகர நரசிம்மர் கோயிலுக்குச் செல்லலாம். இங்கே வராக (பன்றி) உருவத்தில் நரசிம்மர் காட்சியளிக்கிறார். அங்கிருந்து கடினமான பாதைகளில் நடக்கத் தொடங்கினால், ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கலாம். அந்த மலையில் ஓடும் பாவநாசினி நதி நீர் பாறைகளில் விழ, அதன் மீது நடந்து செல்வது ஒரு சுகமான அனுபவம். நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த இடம் ஜ்வாலா நரசிம்மர் என்பது நம்பிக்கை. இதன் முன்பிருக்கும் அருவியில் இருந்து விழும் குளிர்ந்த நீரில் நனைந்தபடியே கோயிலுக்குச் சென்று வரலாம்.
சொல்ல மறந்து விட்டேனே… உக்ர ஸ்தம்பம் வரை செல்ல முடியாதவர்கள், குரோதகர நரசிம்மர் கோயிலில் இருந்து மேலே ஏறும்போது மலை உச்சியைக் காணலாம். உச்சியில் வானுயர காட்சியளிக்கும் காவி கொடியைப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் மெய் சிலிர்ந்து விடும். ஜ்வாலா நரசிம்மர் கோயிலுக்கு 100 அடி முன்பு உக்ர ஸ்தம்பத்தில் இருந்து கீழே வரும் வழி இணையும். அங்கு சென்ற மற்றொரு பிரிவினரிடம் அனுபவங்களைப் பகிர்ந்தபடியே மேலே ஏறினோம்.
அந்த இடத்தில் மூச்சு முட்டியது. எங்களுடன் 70 வயது முன்னாள் ராணுவ வீரர் சோர்ந்து விடாமல் வேகமாக ஏறத் துவங்கினார். அந்த உற்சாகம் எங்களையும் தொற்றி கொண்டது.இந்த இடங்களுக்குச் சென்றுவிட்டு, கராஞ்ச நரசிம்மர் கோயிலுக்கு மீண்டும் வந்து சேர்ந்தோம். இருட்டுவதற்குள் யோகானந்த நரசிம்மரை
யும், சத்ரவட நரசிம்மரையும் தரிசித்தோம். இரண்டும் அருகருகே அமைந்துள்ளன. பிரகலாதனுக்கு யோக கலையைக் கற்பித்தவாறு யோகானந்த நரசிம்மர் வீற்றிருக்கிறார். இந்த ஏழு நரசிம்மர்களையும் தரிசித்துவிட்டு தங்கிருந்த இடத்துக்கு அயர்ச்சியுடன் வந்து சேர்ந்ததும் என்னை அறியாமல் தூக்கம் வந்துவிட்டது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை யிலேயே பார்கவ நரசிம்மரையும், பாவன நரசிம்மரையும் காண புறப்பட்டு விட்டோம். இந்த இடங்களுக்கு ஜீப் மூலமாக மட்டுமே பயணிக்க முடியும். கடினமான பாதையில் புழுதி பறக்க ஜீப்பில் செல்வது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் தான். அதிலும் பார்கவ நரசிம்மர் கோயில் அமைந்திருக்கும் சிறு குன்றுக்கு செல்லும் வழியில் பார்கவ தீர்த்தத்தையும் குரங்குகளையும் ரசித்தபடியே கடந்தோம். நவ நரசிம்மர்கள், கீழ் அகோபிலத்தில் இருக்கும் பிரகலாத வரதர் என பத்து கோயில்களையும் தரிசித்துவிட்டு, மீண்டும் சென்னை புறப்பட்டபோது, மீண்டும் அகோபிலம் எப்போது வருவோம் என்ற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.
பயணத்தில் கவனிக்க வேண்டியவை
1.அகோபில பயணம் வெறும் புனித பயணம் மட்டுமல்ல. உடல் நலம் சார்ந்தது. அதனால் பயணம் புறப்படுவதற்கு முன்னால் ஒரு மாத காலம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்தான ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.
2. நன்கு திட்டமிட்டு பயணம் மேற்கொண்டால் இரண்டு நாள்களுக்குள் அனைத்துக் கோயில்களையும் தரிசித்து விட முடியும்.
3. அகோபிலத்தில் தங்குமிடங்கள் குறித்து திட்டமிட்டு செல்வது நல்லது. சனிக்கிழமைகளில் இங்கு அதிக கூட்டம் காணப்படும்.
4.அகோபில மடத்துக்குச் செல்ல விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை முன்கூட்டியே தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
5.மலை ஏறும்போது ஒரு லிட்டர் குடிநீர், அரை லிட்டர் குளுகோஸ் கலந்த நீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
6. அகோபிலத்தில் வழிகாட்ட வழிகாட்டிகள் இருக்கிறார்கள். உக்ர ஸ்தம்பித்துக்கும் கிடைக்கிறார்கள்.
7.காட்டுப் பாதையில் பயணிக்கும் ஜீப்கள் முறையான அனுமதி பெற்றுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பயணிக்கவும். நடுவழியில் அதிகாரிகள் மடக்கும்போது நாம் தத்தளிக்காமல் இருக்க உதவும்.
8.செப்டம்பர்-, அக்டோபர் மாதங்களில் அகோபில பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற காலம் என்கிறார்கள். கோடை காலத்தில் மலைப்பயணம் மேற்கொள்ளும்போது அயர்ச்சி அதிகமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.