ஜகம் புகழும் புண்ணிய கதை!

ராமாயண காதையில் திளைத்தவர்கள், குறிப்பாக கம்ப ராமாயணத்தை அணுவணு வாய் ருசித்தவர்கள் இதுபோன்ற காப்பிய சாரம் இளைய சமுதாயத்துக்குச் சென்று அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனத் துடிப்பது இயல்பு. கடவுளே நமக்காக இறங்கி வந்து மனித ரூபமெடுத்து நம் போல் கஷ்டங்களைப் படத் துணிந்தார். அத்தகைய அவதார புருஷன் கதை சாரத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க விழைவது தூங்காமல் தொண்டுள்ளம் புரிவோர்க்கே தெரியும்.

“அவதாரம் என்றால் என்ன? எந்தவொரு மாபெரும் சக்தி கீழே இறங்கி வரவேண்டிய தேவையே இல்லாவிடினும், கீழே இருப்பவர்களை மேலே தூக்கிவிட்டு அவர்களை ஏற்றம் பெறுமாறு செய்ததோ, அதுவே அவதாரம்,” என்பர் பெரியோர்.அவதார புருஷர்கள் பூமிக்கு வர வேண்டிய தேவை இருந்ததா? என வினவலாம். இருந்தாலும் இங்குள்ள ஜனங்கள் சுபிட்சம் பெற நன்னெறியோடு வாழ்ந்து அவர்களை மேலே மேலே ஏற்றி விட பரம்பொருளான மஹாவிஷ்ணு கீழே இறங்கி ராமபிரானாக மனித அவதாரம் எடுத்தது. இன்றளவும் ராம ராஜ்யம் எனப் பெருமைப்படுமளவுக்கு அயோத்தியை ஆட்சி செய்தது.

எனவே அது அவதாரம். யானை தன் காலைப் பிடித்தவர்களைத் தன் தலைக்கு மேலே தூக்கி விடும். அதுபோல நம்மைக் கடைத்தேற்ற வந்த ஒரு சக்தி ராஜாராம சக்தி. ஆதிமூலமான வேழத்துக்கே (யானை) அவன் பேரைக் கூப்பிட்ட மாத்திரத்தில் தன்கைச் சக்கரத்தை ஏவி முதலையிடமிருந்து காத்தவன் ஆபத்பாந்தவனான மஹாவிஷ்ணு.ராமனின் வாழ்க்கைமுறை எதிர்கால சந்ததியினருக்கு உதவும் முறையில் வழி காட்டுநெறிகள் வால்மீகியால், கம்ப நாட்டாழ்வாரால் பல இடங்களில் விளக்கப் படுகின்றன. தற்போது தாங்கொணாப் பிணிகள் போன்றதுக்கங்கள், இன்ன பிற, சிக்கல்களை விடுவிக்கவும் வழிவகைகள், உபாயங்கள் ராமாயணத்திலேயே விரவிக் கிடக்கின்றன.

உறவினர்களை, நண்பர்களை எப்படி அரவணைத்துப் போக வேண்டும்? மூத்தோரிடம் மரியாதை, ஆசிரியரிடம் பக்தி, கட்டிய தாரத்திடம் அன்பு, தன்னை அண்டி வந்தோரைக் காக்கும் உயர் குணம், மற்றவர்களின் உயர் குணங்களைப் பலர் அறியப்பாராட்டும் நற்பண்பு, பொறுமை, வீரம், இதமாகப் பேசுவது, மக்களைச் சரியாக எடைபோடுவது, தன்னை அண்டி வந்தோர்க்கும் அன்பு காட்டி அரவணைத்து நிற்பது, பிறர் நலனில் அக்கறை கொள்வது; பாசம், இறை உணர்வு – என வாழ்வின் அத்தனை பரிணாமங்களையும் தொட்டுச் செல்கிறது ராமாயணம்.

விபீஷண சரணாகதி, அனுமனின் அறிமுகம், தந்தை தசரதனே கை கேயிக்கு கொடுத்த வாக்குறுதிக்காக பின்னால் வருந்துவது (யுத்தகாண்ட மீட்சிப்படலம்) என பல எடுத்துக் காட்டுகள் அள்ளஅள்ளக் குறையாமல் ராம காதையில். வாழ்வில் இழப்புகள் என்று வரும்பொழுது என்ன, எங்கே, எப்படிச் செய்யலாம் என்று தவிக்கும் உள்ளங்களுக்கு வழிகாட்டியாய், அருமருந்தாக இருப்பது ராமனின் வாழ்க்கை முறை.இளைஞர்கள் வாழ்வை எதிர்கொள்ள உதவும் ஓர் அற்புதமான காப்பியம்.
ராமாயணம், மகாபாரதம் தொடர்பான காப்பியங்களுக்கு வியாகியானமாக அறிஞர் பலரும் உரை எழுதியுள்ளனர்.

கனம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஆங்கிலத்தில் சரளமாக தொடர் சொற்பொழிவாற்றியவர். மாலை நேரங்களில் கல்லூரிக் கூட்டங்களில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் முன் வரிசையில் அமர்ந்து சுவைத்து அத்தத்துவங்களின் சாரத்தைத் தமது தீர்ப்புக்களில் ஏற்றும் அளவுக்கு ராமாயண தத்துவங்கள் எக்காலத்துக்கும் ஏற்ற மருந்து. மூதறிஞர் ராஜாஜி தனது சக்ரவர்த்தி திருமகன் நூலில், ‘குழந்தைகளுக்கு ஒரு வார்த்தை’ என்ற குறிப்பில், யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தைகள் தாங்களே படித்து புரிந்து கொள்வதற்காகவே முக்கியமாக எழுதப்பட்ட நூலாகவே குறிப்பிடுகின்றார்.

வாலி வதம் போன்ற சில பகுதிகளில் ஆராய்ச்சி நோக்குடனும் தமது ஒப்புமைக் கருத்துகளைக் கூறியுள்ளார். அரிச்சந்திரனின் வரலாறு காந்திஜியால் படிக்கப்பட்டு, அவரது வாழ்வில் திருப்பம் ஏற்படுத்தி அவரை மகாத்மாவாக்கியது. இவை காட்டும் நற்பாதைகளை அறிந்த பல வெளிநாட்டினர் தம் நாட்டுப் பாடங்களில் நமது இதிகாசங்களை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வந்தவண்ணம் உள்ளனர்.

சமீபத்திய செய்தி:
ராமாயணம், மஹாபாரதம் என்பது இதிகாசங்களைப் போன்ற பாடங்களாகக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது ஐக்கிய அரபு நாட்டு அரசாங்கம். “விஷன் 2030” என்கிற பரந்த திட்டத்தின் கீழ் அந்நாட்டு பிரின்ஸ் முகமத் பின் சல்மான் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவின் புராதனமான சித்த மருத்துவம், யோகா போன்றவையும் இந்த விஷன் திட்டத்தில் இடம்பெறுகின்றன. இளைய தலைமுறை இதனைச் சிந்தையிலேற்றி இக்காப்பியப் பண்புகள் அனைவரது சிந்தையிலும் உருவேறி நாடுயர, தாமும் உயர பாடுபட வேண்டும்.