எம்.ஆர்.எம்மில் மோகன் பாகவத் பேச்சு

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (ஏம்.ஆர்.எம்) கூட்டம், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘பாரதத்தில் உள்ள முஸ்லிம்களை தேசத்தை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் ஹிந்துக்களே அல்ல. வழிபாட்டை வைத்து யாரும் மக்களை வேறுபடுத்த முடியாது. கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. பாரத மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பொறுத்தவரை, பாரதம் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், ஹிந்துக்கள், முஸ்ஸில்கள் ஆதிக்கம் என்பதைவிட இந்தியர்கள் ஆதிக்கம் என்ற நிலையைத்தான் விரும்புகிறோம். பசு புனிதமானது. அதனை கொல்வது தவறு, அதுபோல் ஒரு மனிதனை கொல்வதும் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது. அவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தைக் கட்டமைக்கவே நாங்கள் விரும்புகிறோம். மக்களை ஒன்றிணைக்கும் பணியை அரசியல் கட்சிகளிடம் விட முடியாது, அவர்களால் மக்களை இணைக்கும் கருவியாக செயல்பட முடியாது, சில நேரங்களில் சிதைக்கவும் செய்யலாம். பாரதத்தில் இருக்கும் முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இங்கு இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியம்’ என கூறினார்.