உதயநிதி பேச்சுக்கு பதிலடி தர மோடி அறிவுரை

சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக மனம் திறந்து தன் கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது, ‘சனாதனத்தை இழிவாக பேசியதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்’ என, மத்திய அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், சனாதன தர்மம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். ‘சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது; அதை ஒழிக்க வேண்டும்’ என, அவர் பேசினார். இது, நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள், உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. உதயநிதி மீது நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள், போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், சனாதன தர்மத்துக்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தி.மு.க., இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகளின், ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள சில கட்சிகளும், உதயநிதியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளன. இது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காத்து வருகிறது. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் வெறும் எதிர்ப்பு கருத்து மட்டுமே தெரிவித்துள்ளன; உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.இவ்வளவு நடந்த பிறகும், தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க மறுத்துள்ள உதயநிதி, மீண்டும் மீண்டும் இது போல் பேசுவேன் என்றும் கூறியுள்ளார். விவகாரம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதும், உதயநிதிக்கு ஆதரவாகவே தி.மு.க., தலைமை கருத்து தெரிவித்து வருகிறது.

‘உதயநிதி மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவதுாறு வழக்கு தொடர வேண்டும்’ என, முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் உட்பட, 262 பேர் கூட்டாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், புதுடில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின்போது, சனாதன தர்மம் விவகாரம், இந்தியாவுக்கு ‘பாரத்’ என்று பெயர் மாற்றுவது தொடர்பாக, பிரதமர் மோடி பேசியதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் மோடி பேசியதாக கூறப்படுவதாவது: சனாதன தர்மம் தொடர்பாக, இழிவாக பேசப்படுவதற்கு, மத்திய அமைச்சர்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.இந்த விஷயம் தொடர்பாக முழுமையான தகவல்களை அறிந்து, தெரிந்து, தகுந்த ஆதாரங்களுடன், சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவோருக்கு சரியான பதிலடியை மத்திய அமைச்சர்கள் அளிக்க வேண்டும். பாரத் விவகாரம் தொடர்பாக, கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுவர். சனாதன தர்மம் விவகாரத்தால், பாரத் விவகாரம் நீர்த்து போய்விடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.