தேசியக்கொடியை ஏந்தி செல்லும் மாரியப்பன்

ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ளது. இப்போட்டியில் பாரதம் சார்பில் 24 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் வழக்கப்படி தொடக்க விழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் அணிவகுப்பில் பங்கேற்பர். அந்நாட்டின் கேப்டன், தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற வீரர்கள் அவரைப் பின்தொடர்வர். அதன்படி, இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளும் பாரத அணியை தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வழி நடத்துகிறார். பாரதத்தின் தேசிய கொடியை கையில் ஏந்தி அணியை வழிநடத்தும் முதல் தமிழன் என்ற பெருமையை பெற உள்ளார் மாரியப்பன். கடந்த ஒலிம்பிக் போட்டியில் தேசத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள் நடப்புத் தொடரிலும் பங்கேற்கும் பட்சத்தில் அவர்களை தேர்வு செய்து கேப்டனாக அறிவித்து கௌரவித்து வருகிறது நமது விளையாட்டு அமைச்சகம். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து கேப்டனாகவும், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு மாரியப்பன் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.