ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தந்த மகான்

சுவாமி சகஜானந்தரின் இயற்பெயர் முனுசாமி. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் இருந்தது. சொந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்தார். திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஒரு சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்பித்தார். பள்ளி நிர்வாகம் ‘சிகாமணி’ பட்டம் வழங்கியது. அவரை மேல் படிப்பிற்காக அமெரிக்கா அனுப்புவதாகக் ஆசை வார்த்தை கூறிய கிறிஸ்தவ மிஷனரி நிர்வாகம், அதற்காக அவர் கிறிஸ்தவ  மதத்துக்கு மாற வேண்டும் அல்லது இதுவரை கல்வி கற்பித்த பணம் அனைத்தையும் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது. அவர், அதை மறுக்கவே 8ம் வகுப்பில் பாதியிலேயே பள்ளியை விட்டு துரத்தியது.

குடும்ப வறுமையால் படிப்பை விட்டுவிட்டு, பெற்றோருடன் கோலார் தங்கவயலில் கூலி வேலை செய்தார். ஆன்மிக நூல்களைக் கற்றார். நீலமேக சுவாமிகள் என்பவரின் ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்டார். அவருடன் பல கோயில்களுக்குச் சென்றார். காஞ்சிபுரம் தட்சிண ஸ்வாமியிடம் ஆன்மிக விஷயங்களைக் கற்றார். வியாசர்பாடி கரப்பாத்திர சுவாமிகளின் குருகுலத்தில் சேர்ந்தார். அங்கு அவருக்கு‘சுவாமி சகஜானந்தர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

1910ல் பட்டியல் இன மக்களுக்கு சேவை செய்வதற்காக சிதம்பரத்துக்கு இவரை குரு அனுப்பி வைத்தார். சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து சமூக மக்களும் இவருக்கு உதவினர். பணமாகவும், நிலமாகவும் தானம் வழங்கினர்.

1911-ல் தமது மடத்திலேயே ஒரு திண்ணைப் பள்ளியை தொடங்கினார். 1916ல் நந்தனார் கல்விக் கழகத்தைத் தொடங்கினார். இதற்காக பல வெளி நாடுகளுக்கு சென்று உரையாற்றி நிதி திரட்டினார்.

பட்டியல் இன மக்களின் நலனுக்காக அரசியலிலும் ஈடுபட்டார். சுமார் 34 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். அப்போது பட்டியல் இன மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

1959ல் தனது 69வது வயதில் மறைந்தார். இவருக்கு தமிழக அரசு சார்பில் அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் பள்ளிக்கு எதிரே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமி சகஜானந்தரின் நினைவு தினம் இன்று

  • சங்கீத பிரியன்