கீதை தந்த தீரம்!

நவம்பர் 3, 1947…
பாரதத்துடன் இணைந்துவிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டிருந்தது. புத்கம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாரத ராணுவத்தின் 3 படைப்பிரிவினரில் 2 பிரிவினர் முகாமுக்குத் திரும்பிவிட்டனர். மதியம் 3 மணிக்கு புறப்பட நினைத்திருந்த மேஜர் சோம்நாத் சர்மா தலைமையிலான படைப்பிரிவின் மீது, குல்மார்க்கில் இருந்து 700க்கும் மேற்பட்ட ஊடுருவல்காரர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். பாரத ராணுவத்தின் எண்ணிக்கையை விட எதிர் தரப்பின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஸ்ரீநகரைப் பாதுகாக்க தீரத்துடன் போரிட்டனர். தனது படை வீரர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்தபடி, வெடிமருந்துகளை விநியோகித்து மேஜர் சோம்நாத் முன்னேறிக் கொண்டிருந்தார். எங்கிருந்தோ வந்த வெடிபொருளில் சிக்கி பலத்த காயங்களுடன் மேஜர் வீரமரணம் எய்தினார். ”எதிரிகளுக்கும் நமக்கும் 50 அடிகளே வித்தியாசம். ஆனால் கடைசி வீரன் உயிரிழக்கும் வரை, கடைசி தோட்டா தீரும் வரை பின்வாங்க மாட்டோம்” என்பதுதான் தனது தலைமையகத்துக்கு அவர் கடைசியாக அனுப்பிய தகவல்.

அந்தத் தாக்குதலில் சோம்நாத் சர்மாவுடன் சேர்ந்து 21 பாரத ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்தினார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட அவரின் உடலை அடையாளம் காண உதவியது, அவரது துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த தோலுறையும் சட்டைப்பையில் வைத்திருந்த பகவத்கீதையும் தான். பாரத ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா முதல் முறையாக வழங்கப்பட்டது மேஜர் சோம்நாத் சர்மாவுக்குத் தான்.