உள்ளூர் தலிபான் ஆதரவாளர்கள்

முஸ்லிம்களின் ஷரியத் சட்டப்படி ஆட்சி நடத்துவோம் என கூறுகின்றனர் தலிபான் முஸ்லிம்கள். பெண்களுக்கு உரிமை, கல்வி, அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு என ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகின்றனர். ஆனால் அவற்றை நம்பாமல், உயிருக்கு பயந்து அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுவதும் அதே முஸ்லிம்கள்தான். அவர்களுக்கு அருகில் உள்ள சக முஸ்லிம் நாடுகளே அடைக்கலம் தருவதில்லை. இந்த விசித்திர சூழலில் நமது பாரதத்தில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழுகின்றன என்பது அதைவிட விசித்திரம். நாம் தமிழர் கட்சியின் சீமான், இயக்குனர் அமீர் ஆகியோர் தலிபான்களை பயங்கரவாதிகள் என்று கூறக்கூடாது அவர்கள் போராளிகள் என அழைக்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை கொள்கை பரப்பு செயலாளர் உமர் அக்தர் தனது டுவிட்டர் பதிவில், ’20 ஆண்டு கால யுத்தம் நிறைவு பெற்றது. தலிபான்கள் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்கள். மண்டியிடாத மானம், வீழ்ந்து விடாத வீரம் வெற்றிகொண்டது’ என தலிபான் பயங்கரவாதிகளை புகழ்ந்துள்ளார். இங்குள்ள காட்சி ஊடகங்களோ இவர்களுக்கு மேலாக தலிபான்களை புகழ்கின்றன. அவை, தலிபான்கள் மிகப்பெரிய சாதனை படைத்து விட்டதாகவும் அசால்டாக ஆப்கனை கைப்பற்றிவிட்டதாகவும் புகழ்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதைத்தவிர, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலாளர் மவுலானா உம்ரைன் மஹ்ஃபுஸ் ரஹ்மானி, சமாஜ்வாதி கட்சி எம்பி ஷபிகுர் ரஹ்மான் பர்க், முனாவர் ராணா, ஒருசில முஸ்லிம் அமைப்பினர் என பலரும் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவது, நமது நாடு எதனை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை விதைக்கிறது.