பாரதமெங்கும் தீப ஒளி வழிபாடு

‘பாரதம்’ என்பது நம் இந்திய தேசத்தின் பெயர். ‘பா’ என்றால் ஜோதி, ஒளி, பிரகாசம் என்பது பொருள். ‘ரதம்’ என்றால் விருப்பம் என்று பொருள். ஒளியை விரும்புபவர்கள் பாரதியர்கள். அக்னி சாட்சியாக நாம் எந்த ஒரு செயலையும் செய்கிறோம். முன்பெல்லாம் ஹோமம், யாகம் செய்து ஒவ்வொரு தெய்வ காரியமும் செய்வது வழக்கமாக இருந்தது. தற்காலத்தில் விளக்கேற்றி அந்த ஜோதியின் சாட்சியாக தெய்வ வழிபாடுகளை நடத்துகிறோம்.

‘அக்னி முகாவை தேவா:” என்று கூறப்படுகிறது. யாகங்களில் இடும் ஹவிசுகளை அக்னிதேவன் எடுத்துச் சென்று அந்தந்த தேவர்களுக்கு அளிக்கிறான் என்பது சாஸ்திரங்கள் எடுத்தியம்பும் கருத்து. இத்தகைய அக்னி வழிபாடும் தீபம் ஏற்றும் வழக்கமும் இமயம் முதல் குமரி வரை நம் வழக்கத்தில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட இனம், ஜாதி என்ற பாகுபாடின்றி பாரதியர் அனைவரிடமும் உள்ள பாரம்பரிய வழக்கம். இரண்டு வேளையும் வீட்டில் தீபமேற்றும் போது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலவுகிறது என்பது பாரத தேசத்தின் நம்பிக்கை.

தேவதைகளை வரவேற்பதற்கு தீபமேற்ற வேண்டும் என்பது நம் முன்னோர் கண்டறிந்த உண்மை. காலையும் மாலையும் சுத்தம் செய்யப்பட்ட வீட்டில் விளக்கேற்றுவது லட்சுமிகரமானது என்று சாமானியர்களுக்கு கூட தெரியும். தெய்வத்தின் முன்பாக, துளசி மாடத்தின் முன்பாக, கோலத்தின் நடுவில், வீட்டு வாசல் கதவருகில் தீபம் ஏற்றி வைப்பது தீய சக்திகளை விலக்கி மங்களத்தை அளிக்கவல்லது என்பதற்கு தீபமே ஆதாரம். ஏதேனும் ஒரு சங்கல்பம் செய்துகொண்டு தீபம் ஏற்றி அந்த அக்னிக்கு ஏதாவது ஒரு பழமாவது நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால் அந்தக் கோரிக்கை கட்டாயம் நிறைவேறும் என்பது சம்பிரதாயம்.

தீபம் ஞானத்தின் சின்னம். அறிவைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் ஞானம் வளருகிறது. ஒரு விளக்கின் ஒளியிலிருந்து பல தீபங்களை ஏற்ற முடியும். இருளை விரட்டி ஒளியைக் கொடுக்கும் சக்தி கொண்டது தீபம். அதுபோல் அஞ்ஞான இருளை அகற்றக் கூடியது ஞானம். விளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூமாலை சுற்றி அலங்கரித்தாலும், விளக்கு ஏற்றிய பின் லக்ஷ்மி ஸ்வரூபமான தீப ஒளியை வணங்கி மீண்டும் குங்குமம் இட்டு பூக்களை சமர்ப்பித்து பூஜையை தொடங்குவது மரபு. இவ்விதம் அக்னி தேவனையும் லட்சுமி ஸ்வரூபமான தீப ஒளியையும் ஒருசேர வணங்கி வேண்டிய பலனைக் கட்டாயம் அடைந்து இன்புறலாம்.

-ராஜி ரகுநாதன்