நன்மதிப்பை கெடுக்கும் ஜிஹாதிகள்

பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புகள், புர்கா சர்ச்சையில் எங்களை இழுத்து எங்கள் நன்மதிப்பைக் கெடுக்க முயல்கின்றன என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) குற்றம்சாட்டியுள்ளது.  அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற பயங்கரவாத முஸ்லிம் அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சி.எப்.ஐ), பர்தா சர்ச்சையில்  ஏ.பி.வி.பியின் புகழைக் கெடுக்க அதனை இந்த சர்ச்சையில் வேண்டுமென்றே இழுத்து வருகிறது. கட்டாய  ஆடைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ள பள்ளி, கல்லூரிகளில், சீருடை அணிய வேண்டாம், மாணவர்கள் ஹிஜாப், புர்கா, காவித்துண்டு அணிந்து வரலாம் என்பது போன்ற எந்தப் பிரச்சாரத்தையும் ஏ.பி.வி.பி மேற்கொள்ளவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். 2018ம் ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஏ.பி.வி.பி துணை நிற்கும்.  இந்நிலையில், தற்போது எங்களின் போராட்டம் லாவண்யாவுக்கு நீதி கோரி மட்டுமே உள்ளது. கல்வி நிலையங்களை வகுப்புவாதமாக்கும், கவனத்தை திசை திருப்பும் முயற்சிகள் எதுவும் நடக்காது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.