மதுரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்

மதுரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவான கருத்துக்களை முகநூலில் பரப்பிய வாலிபருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி ஆவணங்களை  பறிமுதல் செய்தனர். மதுரை, காஜிமார் தெருவை சேர்ந்தவர் முகம்மது இக்பால் என்பவர், `தூங்காவிழிகள் இரண்டு’ என்ற முகநூல் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார். இந்தப் பதிவுகளில் உள்ள கருத்துக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ், ஹிஜாபுல் தாஹிர் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும், மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருந்ததால் கடந்த 2020, டிசம்பரில் முகம்மது இக்பால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கு, கடந்த ஏப்ரலில் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த அதிகாரிகள், முகம்மது இக்பால் அளித்த தகவலின் அடிப்படையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மதுரை காஜிமார் தெரு, மகபூப்பாளையம், கே.புதூர், பெத்தானியாபுரம் ஆகிய 4 பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடத்தினர். இச்சோதனையில், அலுவலகங்கள் மற்றும் சிலரின் வீடுகளிலிருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்க், செல்போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள், பென் டிரைவ்கள், தடை செய்யப்பட்ட புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட 16 வகையான ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த ஆவணங்களின் அடிப்படையில், காவலில்  உள்ள முகம்மது இக்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். இந்த சோதனையில் தற்போது யாரும் கைது செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.