சர்வதேச சைகை மொழி தினம்

கைக்குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு தங்கள் தேவையை தெரிவிக்க பயன்படுத்தும் சைகை மொழி அவர்களுக்கு இடையேயான மட்டுமேயான ஒரு பிரத்தியேக உரையாடல். மனிதன், தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முதலில் பயன்படுத்திய மொழியும் சைகை மொழிதான். பொதுவாக நாம் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை பேச்சு மூலமே வெளிப்படுத்துகிறோம். இருப்பினும், காது கேளாதவர்கள், பேசும் திறனற்றோர், குளோபல் அபேசியா எனப்படும் மூளை நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோர்களுக்கு இது ஒரு சவால்தான்.

அதற்காக உருவாக்கப்பட்டதுதான் சைகை மொழி. பெரும்பாலான சைகை மொழிகள் எழுத்துக்கள், எண்கள், கை நிலைகள், உடல் தோரணை, முகபாவனைகளை இணைத்ததாக இருக்கும். இவை கையொப்பமிடப்பட்ட மொழிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அமெரிக்க சைகை மொழியில், ஆங்கிலத்தில் உள்ள, 26 எழுத்துக்களையும் ஒரே கையால் சைகை செய்து காண்பிக்கின்றனர். இதற்கு 8,000த்திற்கும் மேற்பட்ட கை சைகைகள் பயன்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ், பாரத சைகை மொழிகளில் இரு கைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

உலகில் பல சைகை மொழிகளை பலரும் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனினும், சைகை மொழியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த காது கேளாதோரின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் மைக்கேல் திலேப்பின். தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் சைகை மொழிக்கான பல புதிய வடிவங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல தொலைகாட்சிகளிலும் காது கேளாதோருக்கான செய்திகளில் சைகை மொழி பயன்படுத்தப்படுகிறது.

இந்த சைகை மொழியை அனைவரும் விரும்பி கற்றால், இது போன்ற மாற்றுத் திறனாளிகளிடம் நாம் தகவல் பரிமாறவும் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் துணை புரியும். சர்வதேச சைகை மொழிகளின் தினம் செப்டம்பர் 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் ‘ஷிக்‌ஷக் பார்வ்’ (ஆசிரியர் தின விழா) கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்காக ஒலி, எழுத்துகள் இணைந்த சைகை மொழி காணாலிகள், பாரத சைகை மொழி அகராதி, கண் பார்வையற்றவர்களுக்காக ஒலி மூலம் பேசும் புத்தகங்கள் ஆகியவற்றை துவக்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.