சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்

பொதுமக்களை தீ விபத்து உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்தும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே மாதம் 4ம் தேதி சர்வதேச தீயணைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிற உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுகிற வீரமும் ஈரமும் நிறைந்தது தீயணைப்பு வீரர்களின் பணி. மளமளவென பற்றிப் எரியும் நெருப்போ, சடசடவென சரிந்து விழும் கட்டடமோ, சுனாமியோ, பூகம்பமோ எதுவாக இருந்தாலும் அங்கே உதவிக்குத் தீயணைப்புத் துறையின் கரங்கள் நீளும்.

ஒரு விபத்து ஏற்பட்டதும், நமக்கேன் வம்பு என ஒதுங்கிக்கொள்ளாமல் 101 என்ற எண்ணைச் சுழற்றி சம்பவம் நடந்த இடத்தை தெளிவாக ஏதேனும் ஒரு அடையாளத்துடன் தெரிவிக்க வேண்டும். அந்த அழைப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பவம் நடக்கும் இடத்தின் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவிக்கப்படும்.

தீ விபத்து குறித்த தகவல் வந்த 20 வினாடிகளுக்குள் தீயணைப்புப் படையினர் அதற்குத் தகுந்த கருவிகள் பொருத்திய வண்டியுடன் புறப்படுவார்கள். சம்பவம் நடந்த இடத்தை அடைந்ததும் மின்னல் வேகத்தில் செயலாற்றுவார்கள். தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து மீட்புப்பணியில் களமிறங்கும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் வகையில் மிகுந்த சக்தி வாய்ந்த சில அதிநவீன உபகரணங்கள் தற்போது உள்ளன.

ஒரு தீயணைப்பு வீரரின் பணி மிக கடினமான, துணிச்சலான அதே சமயம் சவால் நிறைந்த பணி. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தெரிந்தும் தெரியாததுமான ஆபத்துகளைத் தாங்கிப் பணிபுரியும் வீரர்களின் உடல்நிலை, மன நிலை பாதிக்கக்கூடும். இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எதிரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல இவர்கள் பணி.

தீயணைப்பு வீரர்களது மீட்புப் பணிக்கு நாமும் ஒரு சல்யூட் அடிக்க வேண்டிய நாளிது.

மைதிலி சீனு