தேசிய கீதம் அவமதிப்பு

கரக்பூர் தொழில்நுட்ப மையத்தில், பழங்குடியினர், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஓராண்டு துவக்க நிலை பயிற்சிக்கான, இணையவழி வகுப்பு நடைபெற்றது. இதில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். பாடம் துவங்குவதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் எழுந்து நிற்காமல், தேசிய கீதத்தை அவமதித்து உள்ளனர். இதனால் கோபமடைந்த ஆசிரியை, ‘குறைந்தபட்சம் இந்த நாட்டிற்காக நீங்கள் செய்யக் கூடியது தேசிய கீதத்திற்கு இரு நிமிடங்கள் மரியாதை செலுத்துவது தான். அதைகூட செய்யாமல், ‘பாரத் மாதா கீ ஜெய்’ எனவும் கூறாமல், இந்தியன் என சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’ என, கேட்டுள்ளார். மேலும், மாணவர்களை திட்டி, இணைய வகுப்பில் இருந்து வெளியேற்றியுள்ளார். இதை மாணவர்கள், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அதில், அந்த ஆசிரியை, ‘என் மீது சிறுபான்மையினர் நலத்துறை, கல்வி அமைச்சகம் உட்பட எங்கு வேண்டுமென்றாலும் புகார் கொடுங்கள், கவலையில்லை’ என, கூறுவதும் இடம் பெற்றுள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில், கரக்பூர் ஐ.ஐ.டி., நிர்வாகம், விசாரணை செய்து வருகிறது.