கனடாவுக்கு பாரதம் வலியுறுத்தல்

தப்பியோடி தலைமறைவாக உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை பஞ்சாப் அரசு எடுத்து வருவதை அடுத்து, வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள், பாரதத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. அவ்வகையில், கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வாரம் கனடாவுக்கான பாரதத் தூதர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. சர்ரேயில் உள்ள தாஜ் பார்க் கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சமீர் கௌஷல் என்பவர் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டார். இதனையடுத்து, கனடாவில் உள்ள பாரதத் தூதரகத்திற்கு எதிராகவும், தூதரக நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்படும் பிரிவினைவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டை பாரதம் வலியுறுத்தியுள்ளது. பாரதத்துக்கான கனடா தூதருக்கு மத்திய வெளியுறவுத் துறை நேற்று சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வலியுறுத்தப்பட்டது. மேலும், வியன்னா உடன்படிக்கையின் கீழ் கனடா தனது கடமைகளை சரிவர மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை கனடா அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளது. ஏற்கனவே பாரதத்துக்கு எதிரான இதுபோன்ற பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். னடாவில் உள்ள பாரதத் தூதரகத்துக்கு அந்த நாட்டு அரசு போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.