நல்லதை நாடியதில்… இதழியலாளரான பேராசிரியர்!

மாணவனாக இருந்தபோது தன் ஆசிரியர்களை விட உயர்ந்தவர்கள் யாரு மில்லை என்று நினைத்த அவன் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தான். எழுத்தார்வம் இருந்தது. கல்லூரி முதல்வராக பணியாற்றி கொண்டிருந்தபோது ஓர் ஆராய்ச்சிக்காக ஆங்கில ‘ஹிந்து’ நாளிதழின் நூலகத்திற்கு சென்று தகவல் திரட்ட முடியுமா என்று அப்போதைய நிர்வாக ஆசிரியரான ஜி. கஸ்தூரிக்கு கடிதம் எழுதினார். அவர் அழைத்துப் பேசினார். ”இந்த ஆராய்ச்சி எதற்காக, டாக்டர் பட்டம் பெற்ற பிறகு என்ன செய்வீர்கள்” என்று கேட்டார். அவன் சொன்னான்: இப்போது ஆங்கில பேராசிரியர்; பின்னர் சமூகவியல் அல்லது இதழியல் பேராசிரியராக துறை மாறிக்கொள்ளலாம் என்று நினைப்பதாகச் சொன்னான். ”பத்திரிகையாளனாக வாய்ப்புக் கிடைத்தால் பணியாற்றுவீர்களா” என்று கேட்டார். ”ஆம்” என்றவுடன் அவனுக்கு தென்னாற்காடு மாட்ட நிருபர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இடையில், சென்னை தலைமை அலுவலகத்தில் சில காலம் துணை ஆசிரியராகவும். நிருபராகவும் பணியாற்றினான். இந்த வாய்ப்பை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த வேலைக்கு மனு செய்யவும் இல்லை. தென்னாற்காடு மாவட்ட நிருபருக்கு அப்போதைய தலைமையிடம் நெய்வேலி. அது பெரிய மாவட்டம். மாவட்டத்தில் உள்ள அனைத்து நடப்புகளையும் கூர்ந்து கவனித்து முக்கியமான செய்திகளை அனுப்பியாக வேண்டும். கல்லூரி முதல்வர், பேராசிரியர் என்ற முறையில் அந்த அந்தஸ்து உள்ளவர்களிடம் பழகிய அவனுக்கு அதிகம் படிக்காத சக நிருபருடன் சேர்ந்து செய்தி திரட்ட பொது இடங்களுக்கு சென்று வருவது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனாலும் புதிய பணிக்கு தன்னை மாற்றிக்கொண்டான். ஏழு ஆண்டுகள் அப்படி பணிபுரிந்ததும் அவன் நினைத்துப் பார்த்தான்: “பதினொரு வருட கல்லூரியில் ஆசிரியராக மாணவருக்குக் கற்றுக்கொடுத்தேன். ஏழு வருட கால நிருபர் பொறுப்பில் நிறையவே கற்றுக்கொண்டேன்.” அவன் கற்றுக்கொண்டது என்ன?

கல்லூரி பல்கலைக்கழக இதழ்களுக்கு கட்டுரை எழுதுவதும் பத்திரிகைகளுக்கு செய்திகள் எழுதுவதும் வெவ்வேறு விதமான பணிகள். மொழி புலமை இரண்டுக்கும் தேவை என்றாலும் அதை பயன்படுத்துவது கற்றறிந்த வாசகர்களுக்கு என்பதனால் பத்திரிகைத் துறைக்காக அவன் தன் மொழி நடையை மாற்றிக்கொண்டான். ஆனாலும் ஆங்கில இலக்கிய பரிட்சையின் காரணமாக செய்தி கட்டுரைகளில் தன் புலமையை வெளிக்காட்டினான். ஒரு நிருபரின் வெற்றி என்பது செய்திகளை எழுதுவதில் உள்ள மொழிப்புலமை மட்டுமல்ல என்பதை அவன் தொடக்கத்திலேயே புரிந்துகொண்டான். வேறு என்னென்ன தேவைப்பட்டன?

விரைந்து செயல்படும் ஆற்றல், எல்லோரையும் சமமாகக் கருதுவது, செய்திகள் தெரியவரும் இடங்கள் தவிர செய்திக்கான ஊற்றுக்கண் ஒளிந்திருக்கும் இடம் எது என்பதை உணர்ந்துகொள்ளும் மோப்ப சக்தி, பிறரை முந்திக்கொண்டு செய்திகளைத் தருவது அது டைப் அடிப்பது, தபால் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு தந்தி கொடுக்கும் பேப்பரில் எழுதுவது (பத்திரிகை தந்திகளுக்கென்றே தனி காகிதம் உண்டு), மிக மிக அவசரம் என்றால் தொலைபேசியில் செய்தியை இலக்கண பிழை இல்லாமலும், தகவல் குழப்பம் இல்லாமலும் டிக்டேட் செய்வது. இதெல்லாம் ஒரு நிருபரின் பரபரப்பான வாழ்க்கை அம்சங்கள். இவை தவிர இன்னும் சிலவும் உண்டு.

மனோபாவத்தைப் பொறுத்தவரை, சமூகம் முதலில் குடும்பம்; பிறகு என்ற எண்ணம் வந்தாக வேண்டும். அப்படி மனோபாவம் கொண்டவர்களே வெற்றிகரமான நிருபர்களாக முடியும். அதற்காக குடும்பத்தை கவனிக்க வேண்டாம் என்பதில்லை, கவனிக்க நினைத்தாலும் அது முடியாமல் போகும். ஒரு நாள் காலை நெய்வேலியிலிருந்து கடலூருக்கு புறப்பட்ட போது அவன் தன் மனைவியிடம் சொன்னான். ”நான் மாலை விரைவில் திரும்பிவிடுவேன் சினிமாவிற்கு செல்லாம்” என்று மனைவியோ காத்திருந்தாள், அவனோ கடலூரில் இருந்து திரும்பவில்லை. அங்கிருந்து விழுப்புரம் செல்ல வேண்டியிருந்தது வரமுடியவில்லை என்பதை தொலைபேசியில் கூட தெரிவிக்க நேரம் இல்லை.

தபால் அலுவலகத்தில் தனக்கு தெரிந்தவரிடம் தொலைபேசிக்காக ஐந்து ரூபாய் பணம் கொடுத்து, ”நெய்வேலியில் இருக்கும் என் வீட்டு எண்ணுக்கு போன் செய்யுங்கள் நான் அவசரமாக விழுப்புரம் செல்வதால் மாலை வரமுடியவில்லை என்று தெரிவியுங்கள்” என்றான். அன்று நள்ளிரவில் வீடு திரும்பியபோது மனைவி கேட்டாள் “அவசர வேலையாக நீங்கள் மாலையில் வீடு திரும்ப முடியவில்லை என்பது சரி, ஆனால் அதை நீங்களே தொலைபேசியில் தெரிவிக்கக்கூட அவகாசம் இல்லையா” கேள்வி நியாயம் தான்.

ஆனால் அவனது தொழில் அவசரம், குடும்ப அவசரத்தை மிஞ்சிவிட்டது. இதேபோல் ஒருநாள் காலை தன் மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தான். அன்று காலை நெய்வேலி உரத்தொழிற்சாலையில் ஒரு விபத்து மூன்று பேர் இறந்துவிட்டார்கள். அந்தச் செய்தியை சேகரிப்பதற்கு மும்முரமாக இருந்த அவன் இரண்டு கிலோமீட்டருக்கு உள்ளாக இருந்த ஆஸ்பத்திரிக்கு இரவுதான் சென்றான். நிறை மாத கர்ப்பிணியையும் கவனிக்க முடியாத நிலை. இதேபோல் அவனுக்கு பத்திரிகை தொழிலில் எத்தனை எத்தனையோ இக்கட்டுக்கள், தொழிலில் கவனம் என்றால் விசுவாசமான நிருபருக்கு குடும்பம் இரண்டாம் பட்சம் தான். அவனுக்கு வேறு உப தொழில்களில் நாட்டம் இருக்கக்கூடாது.

செய்தியாளர்களுக்கான ஒரு பத்திரிகையில் நான் படித்த தகவல். ஒரு மனைவி நிருபராக உள்ள தன் கணவரிடம் சொல்கிறாள்: “நம் பெண்ணுக்கு எந்த வேலையில் இருப்ப வரையும் மாப்பிள்ளையாக பார்க்கலாம். அரசாங்க குமாஸ்தாவாக இருந்தாலும் சரி, ஆனால், இன்னொரு நிருபரை மாப்பிள்ளையாக்கிவிடாதீர்கள் நான் பட்டபாடு போதும்.”

சிறந்த நிருபர் என்று ஒருவரை ஊரே கொண்டாடினாலும் அவன் குடும்பத்தாரால் முழுமையாக மதிக்கப்படுவான் என்று சொல்வதற்கில்லை.ஆனாலும் அவனது தொழில் விசுவாசம் இந்த சமூகத்திற்கு நான் ஏதோ செய்துவிட்டேன் என்ற உணர்வை ஏற்படுத்தும். அவன் தன்னை தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதியாக உணருவான். மக்களிடம் மட்டுமே விசுவாசம் என்ற நிலையில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஒதுக்கிவிட்டு தன் மனதிற்கு சரி என்று பட்டதை மட்டுமே எழுதுவான். அவன்தான் நியாயமான நிருபர்.

பத்திரிகைத் துறையில் தான் பெற்ற அனுபவம் பற்றி இங்கே சொல்ல இருக்கிறான். தர்ம சங்கடமான நிகழ்வுகளையும் சேர்த்து. பல சமயங்களில் ஒரு நிருபர் பிறருக்குத்தான் தர்ம சங்கடங்களை ஏற்படுத்துகிறான். அப்படி பட்ட நிகழ்வுகள் சில இனி வரும்.
(தொடரும்)