காசியில் இளையராஜா இசை

தமிழகத்தையும் காசியையும் இணைக்கும் பரம்பரிய கலாச்சாரத் தொடர்புகளை புதுப்பிக்கும் விதமாக ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியை மத்திய அரசும் உத்தரப் பிரதேச அரசும் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில், கடந்த நவம்பர் 19ல் இதன் தொடக்க விழா, பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.விழாவில் இசைஞானி இளையராஜா தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தினார்.இதையடுத்து முதல்முறையாக, அவருக்கு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளேயும் இசையுடன் பக்திப் பாடல்கள் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை சார்பில் இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அவரும் அதனை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.அவ்வகையில், இளையராஜா நாளை (டிசம்பர் 15) காசி விஸ்வநாதர் கோயிலில் இசையமைத்து பாட உள்ளார்.மாலை 6 மணிக்கு தொடங்கும் கச்சேரியில் அவருடன் இசைக்கலைஞர்கள் சுமார் 80 பேர் பங்கேற்கின்றனர்.இதில் 16 பாடல்களை இளையராஜா பாடுகிறார்.சிவன் முன்பாக, மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள 4 பாடல்களை இளையராஜா முதன் முறையாகப் பாட உள்ளார்.வழக்கப்படியான மேடைகள் அமைக்கப்படாமல் தரையில் அமர்ந்துதான் இளையராஜா பாட உள்ளார்.பிரதமர் மோடியின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் புதிய தோற்றத்தில் பிரம்மாண்டமாக உள்ளது.இதனுள் கோயிலின் கருவறை முன்பான உள்ள பெரிய தாழ்வாரத்தில் சுமார் ஆயிரம் பேர் வரை அமர்ந்து இந்த நிகழ்ச்சியை காணலாம்.கச்சேரிக்கு கட்டணம் கிடையாது.முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இசை நிகழ்ச்சியின்போது கோயிலை சுற்றியுள்ள கட்டடங்களில் லேசர் ஒளி நிகழ்ச்சியும் நடத்தப்படும். காசி கோயிலில் முதல்முறையாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி அதுவும் இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சி என்பதால் இதனை கேட்டு மகிழ தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலிருந்தும் சிவ பக்தர்களும், அவரது ரசிகர்களும் வர உள்ளனர்.