ஐ.ஐ.டி மெட்ராஸ் இரண்டாண்டு எம்.ஏ படிப்பு

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையால் (Department of Humanities and Social Sciences) புதிய எம்.ஏ. படிப்புகள் அறிமுகப்படுத்த உள்ளன. மேம்பாட்டுக் கல்வி (Development Studies), ஆங்கிலக் கல்வி (English Studies) ஆகியவை தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளாக இருந்து வருகின்றன. இதற்கு பதிலாக பொருளாதாரப் (Economics) பாடத்தையும் எம்.ஏ. படிப்பில் இணைத்து, இவை மூன்றையும் இரண்டாண்டு எம்.ஏ. படிப்புக்கான பாடப் பிரிவுகளாக விரிவுபடுத்த இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்தப் பாடப்பிரிவுகள் 2023ம் கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்.ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 25 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.மிகையிடங்கள் அடிப்படையில் சர்வதேச மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மார்ச் 2023ல் தொடங்கப்பட்டு, ஜூலை 2023ல் வகுப்புகள் ஆரம்பமாகும்.HSEE தேர்வுக்கு பதிலாக, விரைவில் அறிவிக்கப்பட உள்ள நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இரண்டாண்டு எம்.ஏ. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். சான்றுகள் அடிப்படையிலான கொள்கைப் பகுப்பாய்வுகள், சமூகப் பொருளாதார மேம்பாட்டை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு, தரவு அறிவியல் மற்றும் நிர்வாகம், பருவநிலை மாற்றம், நிலைத்தன்மை, நகரமயமாக்கல் போன்ற தற்காலத்து பிரச்சனைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தனித்துவ அம்சங்கள் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ளன.