ஆலயங்களில் அரசு வெளியேற வீதிகளிலும் நீதிமன்றங்களிலும் வலுக்கிறது ஹிந்துக்களின் குரல் தீர்வு தரும் பழனி?

நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யக் கூடிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு தொகுப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். கடந்த பல சட்டமன்ற தேர்தலின் போது, கட்சிகள் அறிவித்த தேர்தல் அறிக்கையில், ஹிந்து அறநிலையத் துறை ஒன்று இருப்பதையே மறந்து விட்டு ஒப்புக்கு சில சலுகைகளை மட்டும் செயல்படுத்துவதாக அறிவிப்பு இருக்கும்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர், இலவச திட்டங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை, அறநிலையத் துறைக்கு கொடுப்பதில்லை. சில வருடங்களாகவே ‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு’ என்ற கோரிக்கைக்கு தீவிரத் தன்மை உருவாகியுள்ளது. இந்த கோரிக்கையை ஹிந்து இயக்கங்கங்கள் மட்டுமே எழுப்பி வந்தன. தற்போது சில மதசார்பற்ற அரசியல் கட்சியினரும், ஆன்மீக பெரியவர்களும் கூட எழுப்ப முற்பட்டுள்ளார்கள்.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தமிழக கோயில்கள் அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், “11,999 கோயில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோயில்களைப் பக்தர்களிடம் விடுங்கள். தமிழகக் கோயில்களை விடுவிக்கும் நேரமிது” என குறிப்பிட்டுள்ளார்.

தினத்தந்தி நாளிதழுக்கு ஸ்டாலின் கொடுத்த பேட்டியில் தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையில் 414- பக்கத்தில் தி.மு.கழக அரசு 1989-ல் குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைத்திருந்த ஹிந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி கோயில்களின் நிர்வாகம் மேலும் சிறப்புடன் நடைபெறுவதற்குத் தகுந்த அதிகாரங்களுடன் கூடிய சட்ட ரீதியான உயர்நிலை ஆலோசனைக் குழு அமைத்து செயல்படும் என குறிப்பிட்டதை சுட்டிக் காட்டினார். 1989-ல் குன்றக்குடி அடிகளார் அளித்த அறிக்கையில் ஹிந்துக் கோயில்களின் நிர்வாகம், ஹிந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்தும், இத்தனை வருடங்க ளாக ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு ஏன் செயல்படுத்தவில்லை?

சட்டமன்றம், நாடாளுமன்றம், உள் ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட சீட் கிடைக்காதவர்களுக்கு கோயில் தக்கார் என்ற பதவி வழங்கப்பட்டது. இவ்வாறு கோயில் நிர்வாக பொறுப்பிற்கு வந்தவர்கள் கோயில் வருமானத்தில் கை வைக்க துவங்கினார்கள். கழக கண்மணிகளின் கைங்கரியம், உண்டியல் முதல் நில ஆக்கிரமிப்பு வரை நீண்டது. ஆகவே தனி வாரியம் அமைக்க எதுவும் செய்யமாட்டார்கள். தி.மு.க.வை போலவே அ.இ.அ.தி.மு.க.வும் ஹிந்து அறநிலையத் துறையை மாற்றி அமைக்க முயலாது என்பதற்கு அவர்களின் தேர்தல் அறிக்கையே சான்று.

அ.தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் கூட, தனி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றவாக்குறுதி அளிக்கப்பட வில்லை. தங்களது 86வது வாக்குறுதி, ஹிந்து ஆன்மீகப் பயணம் சென்று வர பயணச் சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதன்மையான காரணம், இதன் மூலம் சிறுபான்மை இனத்தவரான கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், ஹஜ் பயணத்திற்கும், ஜெருசலத்திற்கும் போக சலுகை உயர்த்தப் பட்டுள்ளது என்பதுதான்.உண்மையில் ஏன் ஆன்றோர் சான்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அதிக அளவு முறைகேடுகள் நடைபெறுவதும், கோயில் சொத்துக்கள் களவாடப்படுவதும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. சில சம்பவங்களை பார்க்க வேண்டும். அறநிலையத் துறையின் விதி எண் 10ன் படி கோயில் நிர்வாக ஆணையராக நியமிக்கப்படு பவர்கள் ஹிந்துக்களாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய நிலையில் ஹிந்துக்கள் அனைவரும் மத நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை உறுதியாக கூற இயலாது. 1967லிருந்து ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் நாத்திக கொள்கையை கொண்டவர்கள், இவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கடவுள் நம்பிக்கை யற்றவர்கள். சிவன் சொத்து குல நாசம் என்ற நம்பிக்கையை இழிவு படுத்துகிறவர்கள் இவர்கள்.

1967லிருந்து இப்படிப்பட்ட அதிகாரிகளை கொண்டே கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு பாத்தியப் பட்ட, நன்செய், புன்செய், மானாவரி நிலங்களின் மொத்தம் அளவு 5.25 லட்சம் ஏக்கர் என 1970ல் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1986ல் அறநிலையத் துறையில் உள்ள ஆவணங்களின் படி 4.78 லட்சம் ஏக்கர் உள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது. 47,000 ஏக்கர் நிலங்கள் யாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்பதைக்கூட அரசு விசாரிக்கவில்லை. ஏன் என்றால் கழக கண்மணிகளின் சித்து விளையாட்டின் காரணமாக நிலம் மாயமாய் மறைந்து விட்டது.

ஹிந்து சமய அறநிலையத் துறையோ, கோயில்களின் அன்றாட அலுவல்களில் தலையிட்டு, அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது. அறநிலையத் துறை அனுமதித்த பின்தான் கோயில் பணிகள் செய்ய முடியும். அர்ச்சனை டிக்கெட் கட்டணங்களிலிருந்து, உண்டியல் காணிக்கை வசூல் வரை, கோயில் வருவாயில், 16 சதவீதத்தை அரசுக்கு அளிக்க வேண்டுமென தி.மு.க. ஆட்சியில் சட்டமியற்றி, அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தர்ம தரிசனம், கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் என ஆண்டவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலிக்க ஆலோசனையும் வழங்கி, அதில், 16 சதவீதத்தை, ‘ஆட்டைய’ போட்டுக் கொண்டிருக்கிறது. அறநிலையத் துறையில், 1967 வரை, அரசு அதிகாரிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், திமுக ஆட்சி அமைத்த நாள் முதல், கோவில் நிர்வாகத்தில், ‘அறங்காவலர்கள்’ என்ற போர்வையைப் போர்த்திய, கழகக் கண்மணிகளும், உடன்
பிறப்புக்களும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர்.

தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ‘கடவுள் இல்லை; கடவுளைக் கும்பிடு கிறவன் முட்டாள்’ என பரணி பாடிக் கொண்டிருந்தவர்கள். ‘அன்பே சிவம் என்றால்,
அவன் கையில் சூலாயுதம் எதற்கு, வேர்க்கடலை நோண்டவா?’ என கேள்வி கேட்டு, கேலி செய்தவர்கள், அறங்காவலர்கள் போர்வையுடன் கோயிலில் நுழைந்த உடன்பிறப்புகள், கொஞ்சம் கொஞ்சமாக கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை, கபளீகரம் செய்ய துவங்கினார்கள். கோயில்களைச் சுற்றி கடைகளை அமைத்து, அவற்றை கட்சிக் கார்களுக்கு சொற்ப கட்டணத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்கள்.

பல ஆண்டுகளாக கோயிலுக்கு உரிய தொகை செலுத்துவதில்லை.”வருமான வரிச் சட்டப்படி மத நிறுவனங்களின் கணக்குகள் தகுதிவாய்ந்த பட்டயக் கணக்காளரால் தணிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால் அறநிலையத்துறை தணிக்கை பற்றி நன்கு அறியாத, துறை அதிகாரிகளை நியமித்து, தணிக்கை மேற்கொள்வது கண்துடைப்பு நடவடிக்கையாகவே தெரிகிறது” என்று ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தனிப்பட்ட பட்டயக் கணக்காளரை நியமிக்காமல் துறை அதிகாரிகளை வைத்து தணிக்கை செய்யும்போது, நிதி பயன்பாட்டில் உள்ள விதிமீறல்கள் மறைக்கப்பட்டு விடும் என்றும் தணிக்கை அறிக்கையில் எந்த ஆட்சேபணையும் எழுப்பப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களை எடுத்துரைத்து தமிழகத்தின் புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், இன்னும் சில கோயில்களின் ஐந்து ஆண்டு வருமானம், செலவு, நிதிப் பயன்பாடு குறித்து பட்டயக் கணக்காளர்கள் குழுவை நியமித்து தணிக்கை செய்ய வேண்டும் என்று பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் தமிழகத்தில் கோயில் களுக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்போருக்கு அந்த நிலங்களை பட்டா போட்டு கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.’கோயில் நிலங்களை ஆக்கிரமித்து குடியிருக்கும் குடும்பங்களின் நலன் கருதி, விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி நில மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. உள்நோக்கம் கொண்ட இந்த உத்தரவால் உண்மையில் பயனடையப்போவது திராவிட கட்சிகளின் பினாமிகளும், ரவுடிகளும் தான். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஹிந்து கோயில்களின் சொத்துக்கள் படிப்படியாக அரசியல்வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது.

ஹிந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து நீண்டகாலமாக குடியிருக்கும் ஏழைகளுக்கு வழங்க வழிசெய்யும் அரசாணை பிறப்பித்திருப்பது கோயில்களை அழிக்கும் சதியின் துவக்கம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. அவற்றில் வேறு பிரிவினரது கல்வி நிறுவனங்கள்கூட செயல்படுகின்றன. அரசு உத்தரவின்படி அந்த நிலங்களை வேறு பிரிவினருக்கு தாரை வார்க்க வாய்ப்புள்ளது. இந்நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் தேவையில்லாத பிரச்னைகள் எழும். மேலும் கோயில்களுக்கு நிலங்களை மன்னர்கள், நிலச்சுவான்தாரர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தானம் வழங்கியுள்ளனர். அந்த நிலங்களை தாரை வார்ப்பது அவர்களது விருப்பத்திற்கு முரணானது.

திராவிட அரசுகளின் இந்த சதியை முறியடிக்கும் சட்ட போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும்.கோயில் நிலங்களை அபகரித்து ‘கபளீகரம்’ செய்வோருக்கு ‘கிடுக்கிப்பிடி’ போடும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம்சமீபத்தில் அதிரடியாக உத்தரவு பிறப்பித் துள்ளது. ‘கோயில் நலன்களுக்கு எதிராக அதன் நிலங்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது; வேறு பயன்பாடுகளுக்கு எடுக்கக் கூடாது’ என கண்டித்துள்ள, உயர்நீதிமன்றம் ‘உள்ளது உள்ளபடி இருக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசானைக்கு தடை போடப்பட்டது.

தீர்வுதான் என்ன? எவ்வாறு மசூதி, சர்சுகள் பராமரிப்பு என்பது தனி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அதே போல் ஹிந்து ஆலயங்களை நிர்வகிக்க குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைந்த குழு அளித்த பரிந்துரையும், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியரின் பரிந்துரையும் முழுமையாக அமல்
படுத்தவது என்பது ஒன்றே விடிவாகும்.

பழனி தீர்(வு)ப்பு
கடந்த ஆண்டு செப்டம்பரில் பழனி கோயில் நிர்வாக அக்கிரமம் சம்பந்தமாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முதல் வேலையாக கோயில் தக்காரின் EO தன்னிச்சையான ஒப்பந்ததை ரத்து செய்து முறையாக அமைக்கப்பட்ட அறங்காவலர் குழு கோயிலை நிர்வகிக்கவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது. ஒன்பதாண்டுகளாக அறங்காவலர் குழுவே இல்லாமல் தக்கார் தர்பார் நடந்தது குறித்து நீதிமன்றம் வியப்பு தெரிவித்தது. தீர்ப்பு பக்தர்களை கொண்ட குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டும் என்று ஆணையிட்டது. ஆலயத்தைவிட்டு அரசு வெளியேறவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படுவதற்கான முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

வி.ஹி.ப.தீவிரம்
அண்மையில் ரிஷிகேஷில் கூடிய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை பழனி கோயில் தக்கார் ஒப்பந்த முயற்சி பற்றி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கவனத்தில் கொண்டது. சாதுக்கள், ஆன்றோர்கள் அடங்கிய குழுவிடம் ஆலய நிர்வாகம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தியது.

பா.ஜ.க. மட்டுமே
அரசியல் கட்சிகளில் பாஜக மட்டுமே, தனது தேர்தல் அறிக்கையில் ”ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை அரசு வைத்திருப் பதை மாற்றி, நிர்வாகம் ஆன்றோர், சான்றோர், துறவிகள் அடங்கிய தனி வாரி யத்திடம் ஒப்படைக்கப்படும். ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு கோயில் நிலங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடக் கூடாது என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படும். தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும்” என வாக்குறுதி அளித்துள்ளது.

-ஈரோடு சரவணன்