நடந்தது என்ன? மறைக்கும் மீடியா

ஜனவரி 26ம் தேதி மத்திய அரசின் மூன்று வேளான் சட்டங்களையும் ரத்துசெய்யக் கோரி டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளின் போராட்டம் வன்முறையில் முடிவுற்றது. இந்த வன்முறை சம்பவங்களை தினசரி செய்தி தாள்களும், மின்னணு ஊடகங்களும் தங்களுக்கு விருப்பப்பட்ட முறையில் செய்திகளை பிரசுரித்தார்கள். வெளியிடப் படும் செய்திகள் உண்மைக்கு புறம்பாக, வன்முறையை மீண்டும் தூண்டும் விதமாகவும் வெளி வந்தன.

ஊடக தர்மம் என கூச்சல் போடும் அரசியல்வாதிகள் கூட, ஊடகங்களின் பொய் செய்திகளை பற்றி வாய் திறக்கவில்லை. ஜனநாயகத்திற்கு புறம்பாக, சர்வாதிகார முறையில் அரசை மிரட்டும் தொனியில் நடக்கும் விவசாய சங்கங்களைப் பற்றி ஒரு வரி விமர்சனம் கூட எழுத மாட்டார்கள். விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள், அர்பன் நக்ஸல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவி போராட்டத்தை திசைதிருப்பி விட்டார்கள். இந்த உண்மையை ஆங்கில, மாநில மொழி ஊடகங்கள் சில தவிர மற்றவர்கள் எழுதவில்லை. மாறாக மோடி அரசுக்கு எதிரான கருத்துக்களையே வலியுறுத்திய கட்டுரைக ளும், செய்திகளும் வெளி யிட்டார்கள்.

26ம் தேதி நடந்த வன்முறை போராட் டத்தின் உண்மை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 26ம் தேதி காலை 10 மணிக்கு பின்னர் குறிப்பிட்ட வழியாக ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. குடியரசு தின நிகழ்ச்சிக்கு இடையூறு இல்லாமல் இருக்க சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இதை ஏற்றுக்கொண்ட விவசாய சங்கங்கள், விதி முறைகளுக்கு மாறாக காலை 7.30 மணிக்கெல்லாம், விவசாயிகள் டிராக்டர்களால் போலீஸ் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ரூட்டையும் மாற்றிக் கொண்டு செங்கோட்டையை நோக்கி சென்றார்கள். இதை பல ஊடகங்களும் முறையாக குறிப்பிட்டு, விவசாயிகளின் தவறுகளை சுட்டிக் காட்டாமல், அரசின் மீது பழி சுமத்தினார்கள். இரண்டாவது, செங்கோட்டையின் மீது பறந்த தேசிய கொடியை கழற்றிவிட்டு, விவசாய கொடிகளை ஏற்றியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால் உண்மையில் சீக்கியர்கள் ஏற்றியது காலிஸ்தான் கொடி என்பதை தெரிவிக்க மறந்து விட்டு, தொடர்ந்து விவசாய சங்கங்களின் கொடி என வாதிட்டார்கள். தேசிய கொடிக்கு குடியரசு தினத்தன்று நேர்ந்த அவமரியாதையை பற்றி இவர்களுக்கு கவலையே இல்லை. தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் இது பற்றிய செய்திகளை முழுமையாக மறைத்து, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான கருத்துக்களையே முன்வைத்தார்கள். செங் கோட்டையின் மீது கொடியை ஏற்றியது சர்தார் அல்ல கத்தார் (துரோகி) என பஞ்சாப் விவசாய சங்கங்கள் தெரிவித்த கருத்தை கூட தனது நாளிதழில் பிரசுரிக்க தமிழக நாளிதழ்கள் தயாராக இல்லை.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர், இந்தியா டுடே டி.வியின் சர்தேசாய், போன்றவர்கள் மீது வழக்கு தொடுத்தவுடன் கூச்சல் போடும் ஊடகங்கள், டிராக்டர் கவிழ்ந்து இறந்த விவசாயி, போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்ததாக செய்தி வெளியிட்டது மட்டுமில்லாமல், காவல் துறையினர் மீதும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதும் குற்றம் சுமத்தி செய்திகள் வெளிவந்தன. வன்முறையை தூண்டும் விதமாக பேசியவர்கள் மற்றும் தொடர்ந்து எழுதியவர்கள் மீது வழக்கு பாய்ந்தால், ஊடகத்தினரை அச்சுறுத்தல் என மாய்மாலங்கள் செய்தன ஊடகங்கள். விவசாயிகளின் போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவியுள்ளன என மத்திய அமைச்சர் பேட்டி கொடுத்தவுடன், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து, அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி என குற்றம் சுமத்தினார்கள். இந்த குற்றச்சாட்டை மட்டுமே விரிவுப்படுத்தி மின்னணு ஊடகங்கள் விவாதங்களை நடத்தினார்கள். உண்மையில் விவசாயிகளின் போராட்டத்தில் பிரிவினைவாதிகள், தேச விரோத சக்திகள் ஊடுருவியுள்ளன என்பதை சில நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

போராட்டத்தின் 16வது நாள் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பிடித்திருந்த பதாகைகள், சிறையில் உள்ள எல்கார் பரிஷத் அமைப்பினர், டுக்டே டுக்டே கும்பல்கள், ஷார்ஜில் இமாம், உமர் கலித், கலீத் சைஃபீ போன்ற வர்களை விடுதலை செய்ய வேண்டும் என எழுதியிருந்தார்கள். விவசாயிகளின் போராட்டத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என எந்த ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் கேள்விகளை எழுப்ப வில்லை. தமிழகத்திலுள்ள தொலைக் காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு விவாதம் புரியும் சேனல்கள் கூட விவாதம் செய்யவில்லை. இது தான் தமிழகத்தின் தொலைக்காட்சிகளின் தர்மமாகும். ஊடகங்க ளின் நெறியாகும்.

விவசாயி போராட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய கிஷன் யூனியன், போராட்டக்களத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடினார்கள். இந்த கொண்டாடத்தின் போது, கைது செய்து சிறையில் உள்ள அர்பன் நக்ஸல்கள் மற்றும் எல்கார் பரிஷத் அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது தான் விவசாயி களின் போராட்டத்தில் பிரிவினை வாதிகளும் தேச விரோத சக்திகளும் ஊடுரு வியுள்ளார்கள் என கூறியதற்கு சரியான சான்று. ஆனால் எந்த தினசரி நாளிதழ்களும், செய்தி ஊடகங்களும் இந்த செய்தியை பிரசுரிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் ஆஜ் கீ பாத் (Aaj Ki Baat) என்ற நிகழ்ச்சியில், விவசாயிகளின் போராட்ட வீடியோ காண்பிக்கப்பட்டது, விவசாயிகளின் தலைவர் தர்ஷன்பால் சிங் பேசிய போது, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

டிராக்டர் அணிவகுப்புக்கு ஒரு நாள் முன்பு, உளவுத்துறையினர் டெல்லியில் அதிக எச்சரிக்கை நிலையை அறிவித்தது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் இருக்கும் காலிஸ்தான் சார்பு ஆசாமிகள் ஆர்ப்பாட்டங்களை தன்வசப்படுத்தி, டெல்லியில் அமைதியை சீர்குலைக்கும் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. திங்களன்று, டெல்லி காவல்துறையினர் 300க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தானிலிருந்து இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை பேரணியை நாசப்படுத்த உருவாக்கப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்பான நீதிக்கான சீக்கியர்கள் SJF வேலை நிறுத்தங்களை மேற்கொள்வதாக அச்சுறுத்தி பல சந்தர்ப்பங்களில் விவசாயிகளின் போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்ற உண்மையை கூறிய பின்னரும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுபெற்ற ஊடகங்கள், அரசுக்கு எதிரான கருத்துக்களையே முன் வைத்தார்கள். காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு ஆதரவாகவே பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டார்கள். உண்மைக்கு மாறான செய்திகளை வழங்கும் ஊடகங்கள், நெறிமுறை பிறழ்கின்றன என்ற உண்மை விவசாயிகளின் போராட்டத்தில் வெளிச்சமாகியது.