சமஸ்கிருத உறுதிமொழியை மொழிப்பெயர்த்து படித்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்ற விவரத்தை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல், பொதுச் செயலாளர் வேணுகோபால் துணைத் தலைவர் தீபிகா விஸ்வநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதில், “மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 30ம் தேதி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. இவ்விழாவில் நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோம் என்று செய்திகள் பரப்பப்படுகிறது. அது தவறானது. சமஸ்கிருத மொழியில் உறுதிமொழியை நாங்கள் படிக்கவில்லை. மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழியைத்தான் நாங்கள் படித்தோம். தேசிய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டத்தைத்தான் மருத்துவக் கல்லூரியில் பின்பற்றுகிறோம். தேசிய மருத்துவக் கவுன்சில் வழிகாட்டுதலில், புதிதாக மருத்துவக் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மகிரிஷி சரக் சப்த் உறுதிமொழியை பரிந்துரை செய்துள்ளனர். அதேநேரத்தில் இந்த உறுதிமொழியைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு ஏதும் விதிக்கவில்லை. தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகமும் ‘ஹிப்போகிரெடிக்’ உறுதிமொழியைத்தான் எடுக்க வேண்டும், மகரிஷி சரக் சப்த் உறுதி மொழியை எடுக்கக்கூடாது என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. இது சர்ச்சையான பிறகுதான் தமிழக மருத்துவக்கல்வி இயக்குநரகம் தரப்பிலிருந்து ‘ஹிப்போகிரெடிக்’’ உறுதிமொழியைதான் எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வந்துள்ளது. இந்த உறுமொழியைப் படிக்க வேண்டும் என்பதை மாணவர் பேரவையே முடிவு செய்தது. இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் இந்த உறுதிமொழியைப் படிப்பதால் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தே அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இதைத்தான் படிக்க வேண்டும் என்று யாரும் எந்த அழுத்தமும் எங்களுக்கு கொடுக்கவில்லை.’ என தெரிவித்துள்ளனர். மொழியை வைத்து மட்டமான அரசியல் செய்வதில் திராவிடக் கட்சிகளை அடித்துக்கொள்ள உலகில் யாரும் இல்லை என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.