மோடியின் பரிந்துரைக்கு வரவேற்பு

டெல்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை ​​நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “மக்கள் நீதிமன்றத்தின் நீதித்துறை செயல்முறை மற்றும் தீர்ப்புகளைப் புரிந்துகொள்வது கடினம். இதை எளிமையாக்கி அணுகக்கூடியதாக மாற்ற வேண்டியது அவசியம். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். நீதித்துறையின் மீது சாமானியனுக்கு நம்பிக்கை இருப்பதையும், அமைப்பின் ஒரு அங்கமாக உணர முடியும் என்பதையும் இது உறுதி செய்யும்” என கூறினார். தலைமை நீதிபதி என்.வி ரமணாவும் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் இதனை ஆதரித்தனர்.

இந்நிலையில், சிக்ஷா சமஸ்கிருதி உத்தன் நியாஸ் (எஸ்.எஸ்.யு.என்) அமைப்பு, நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையை வரவேற்றுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் அதுல் கோத்தாரி, ‘கடந்த சில ஆண்டுகளாக எஸ்.எஸ்.யு.என் அமைப்பு, மக்கள் தங்கள் தாய் மொழியில் நீதியைப் பெறுவதற்காக முயற்சித்து வருகிறது. பாரதிய பாஷா அபியான் திட்டத்தின் கீழ், நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ளூர் மொழிகளைச் சேர்ப்பதற்காக எங்கள் அமைப்பு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கடந்த காலங்களில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரும் இதே கருத்தை ஆதரித்துள்ளனர். பிரதமரின் ஆலோசனை முன்னோக்கி எடுத்துச்செல்லப்பட வேண்டும். இந்த பரிந்துரைகள் விரைவாக செயல்படுத்தப்படுவதை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் கண்காணிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.