கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்

தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் திராவிட கழகத்தின் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ராமசாமி சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பாரதத்தின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘ஈ.வெ.ராமசாமியின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்துகிறது. பாரதத்தின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளது. இப்படி கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா?’ என கேள்வியெழுப்பினார். இதனையடுத்து இந்த மனுவின் மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.