எப்.டி.ஐ சாதனை

2021 – 22ம் நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் சுமார் 83.57 பில்லியன் டாலர் அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (எப்.டி.ஐ) பாரதம் பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது கடந்த 2020 – 21ம் நிதியாண்டில் 81.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு விருப்பமான நாடாக பாரதம் இருந்தது மட்டுமில்லாமல் பாரதப் பொருளாதாரம் வேகமாக வளரும் வாய்ப்பை பெற்றுள்ள காரணத்தால் ஒரே வருடத்தில் அதிகப்படியாக 83.57 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு குவிந்துள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாரதத்தில் அதிகம் முதலீடு செய்த நாடுகளில் 27 சதவீத தொகையுடன் சிங்கப்பூர் முதல் இடத்திலும் 18 சதவீதத்துடன் அமெரிக்கா 2ம் இடத்திலும், 16 சதவீதம் என்ற அளவில் மொரிஷியஸ் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது. அதிக முதலீட்டை பெற்ற துறைகளில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர், ஹார்டுவேர் துறைகள் முதல் இடத்தையும் சேவை துறை, ஆட்டோமொபைல் துறை ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. மேலும், மொத்த முதலீட்டில் 38 சதவீதப் பங்குடன் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 26 சதவீதம் மற்றும் டெல்லி 14 சதவீதம் என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.