தமிழக கோவில்களின் பரிணாம வளர்ச்சி: ஆய்வு செய்யும் மத்திய தொல்லியல் துறை

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை ஆய்வு செய்து, அவற்றின் பரிணாம வளர்ச்சியை பதிவு செய்ய, மத்திய தொல்லியல் துறை முன்வந்துஉள்ளது. தமிழகத்தில், செங்கல், மண், மரம், சுதையால் கோவில் கட்டப்பட்ட நிலையில், அவற்றை கல் கோவில்களாக மாற்றியதாக, பல்லவர்களின் கல்வெட்டு கூறுகிறது.
ஆனால், சாளுக்கியர்களிடம் இருந்த அந்த கலையை, பல்லவர்களும் விரும்பி கடைப்பிடித்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம், பல்லவர்களுக்கு முன்பே பாண்டியர்கள், குடைவரை கோவில்களை அமைப்பதில் தேர்ச்சி பெற்றிருந்ததையும், அவர்களுக்கு முன் சமணர்கள் கல் படுக்கைகள், பள்ளிகளை மலைகளின் மேல் அமைத்ததையும், வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துஉள்ளனர்.

இந்நிலையில், ஒன்றிலிருந்து ஒன்று என்ற முறையில், தமிழகத்தில் உள்ள கோவில்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளதை, ஆதாரங்களுடன் பதிவு செய்யும் வகையில், மத்திய தொல்லியல் துறையின் தென்மாநில ஆலய ஆய்வு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வுப்பணியை மேற்கொள்ள உள்ளார்.

ஆய்வு நடத்துவது ஏன்?
தமிழகத்தில், 9,000க்கும் மேற்பட்ட பழமை யான கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஹிந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ளன. முக்கியமான சில கோவில்கள் மடங்களின் நிர்வாகத்தின் கீழும் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய, அறநிலையத் துறையிடம் அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்ததும் ஆய்வுப்பணி துவங்கும். பொதுவாக ஒரு கோவிலை, பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம் என பிரித்து கூறி விடுகின்றனர். ஆனால், ஒரு கோவில் நிலைத்திருக்க வேண்டுமானால், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும், நிர்வாகிகளும் பராமரித்திருக்க வேண்டும். அந்த பராமரிப்பில், கோவில்கள் காலத்துக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை முறைப்படி பதிவு செய்ய இந்த ஆய்வு உதவும்.