அரசு உதவியாளர் தேர்வில் குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை-கடந்த 2009 -11ம் ஆண்டில் நடந்த அரசு துறை உதவியாளர் தேர்வு நடவடிக்கையில், இட ஒதுக்கீட்டு கொள்கை மீறப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2009 – 11ம் ஆண்டில், அரசு துறைகளில், 3,475 காலியிடங்களுக்கு தேர்வு நடந்தது. உதவியாளர் பணிக்கான தேர்வில், சாய்புல்லா என்பவர், 223.50 மதிப்பெண் பெற்றார். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான பொதுப்பிரிவுக்கு, 223.50 ‘கட் ஆப்’ ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கும் குறைவாக எடுத்தவர்கள், உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து, தேர்வு நடைமுறையில் மீறல் நடந்திருப்பதாகவும், தன்னை விட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்வாகி உள்ளனர் என்பதால், அதிக மதிப்பெண் பெற்ற தன்னை தேர்ந்தெடுக்கும்படியும், உயர் நீதிமன்றத்தில் சாய்புல்லா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான பொதுப்பிரிவு ஒதுக்கீட்டின் கீழ், சாய்புல்லாவை தேர்ந்தெடுக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, டி.என்.பி.எஸ்.சி., எனும், தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய செயலர், மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் இருந்தும், குறைவான மதிப்பெண் எடுத்த நான்கு பேரை, எந்த அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, தேர்வாணைய செயலர் பதில் அளித்து, மனு தாக்கல் செய்தார். தாங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லை என தெரிவித்து, நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு பிறப்பித்த உத்தரவு:

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பொதுப் பிரிவு மற்றும் முஸ்லிம் பெண்கள் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட காலியிடங்களுக்கான தேர்வில் நடந்த சில விதிமீறல்களை மறைக்க, தேர்வாணையம் நினைக்கிறது. வழக்கு குறித்து உரிய தகவல்களுடன், ஆவணங்களுடன், தேர்வாணைய செயலர் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்வாணைய செயலர் மனு தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

செயலரின் மனுவை பார்க்கும் போது, அது சில அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்துகிறது. அதில் இருந்து, 2009 – 11ல் நடந்த குரூப் – 4 தேர்வு சரியாக இல்லை என்பது தெளிவாகிறது. தேர்வு நடவடிக்கையில், இடஒதுக்கீடு கொள்கை மீறப்பட்டுள்ளது. தகுதி குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்வாணையம் ஒப்புக் கொண்டுள்ளது. அதற்கு, எந்த காரணமும் கூறப்படவில்லை.

தேர்வாணைய செயலருக்கு, திசை திருப்பும் வகையில் தகவல் அளித்த அதிகாரிகள், ஊழியர்களை கண்டுபிடிக்க வேண்டும். தேர்வாணைய நிர்வாகத்திலும் குறைபாடு உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையால், நீதிமன்றத்தையும் திசை திருப்பி உள்ளனர். இது, வெறுக்கத்தக்கது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயரை தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்ததற்காக, அவர்களுக்கு எதிராக தனியாக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.Telegram