குடும்பங்களில் சமத்துவம் காண்போம்

பாலின சமத்துவம் குறித்து எல்லா நாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், எந்த நாட்டிலும் பூரண பாலின சமத்துவம் காணப்படவில்லை என்பதே அதிர்ச்சிகரமான, அவலமான உண்மை. தொல்பழங்குடியினரிடையே சமத்துவநிலை காணப்பட்டுள்ளது. இது, அவர்களது இறை வழிபாட்டிலும் பிரதிபலித்துள்ளது. இதற்கு நிகரற்ற உதாரணம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம். ஆண்மையும் பெண்மையும் சம விகிதத்தில் கலந்துள்ள ஒப்பற்ற உருவம்தான் உமையொருபாகர் என்பதை யாரும் உணராமல் இருக்கமுடியாது. இருப்பினும் இதை வீட்டள விலும் நாட்டளவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்னும் முனைப்பு எழுச்சியுறவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளுள் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங் களிலும் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப் படவில்லை. பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என ஆணாதிக்கம் கொண்ட சிலர் கூறி வருகிறார்கள். ஆண்களிடம் பெண்கள் சலுகையை எதிர்பார்க்கவில்லை. சம உரிமையையே நாங்கள் நாடுகிறோம். சலுகையை சாடுகிறோம்.

சலுகை என்பது உயர்வு மனப்பான்மைக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் இடையிலான ஊசலாட்டம். சலுகை அளிப்பவர்கள் உயர்ந்த வர்களாகவும் சலுகையைப் பெறுபவர்கள் தாழ்ந்தவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். இந்த கண்ணோட்டம் ஆரோக்கியமானது அல்ல. ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் சளைப்பில்லை, இளைப்பில்லை என்பதை உறுதியாக நிலைநாட்டும்வரை பெண்கள் தொடுத்துள்ள சமர் ஓயாது.

நாட்டளவில் மட்டுமல்லாமல், வீட்டளவிலும் கண்ணோட்டம் மாறவேண்டும். பெண்கள் எனில் சுவையாக சமைப்பவர்கள். ஆண்கள் எனில் சமையலை ரசித்து உண்பவர்கள் என்னும் மனோபாவம் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் சில நாட்கள் ஆண்களும் மற்ற நாட்கள் பெண்களும் சுழற்சி முறையில் சமைப்பதும் விரும்பத்தக்கதுதான்.

ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் இடையே மிகுந்த வித்தியாசம் காட்டப்படுகிறது. இது தற்போது ஓரளவுக்கு மாறியுள்ளது என்ற போதிலும் இன்னும் மாற்றம் முழுமைபெற நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலினத் தொடர்பு மட்டும்தான் இருக்கமுடியும் என்பது வக்ரமான பார்வை. இந்த வக்ரமான உக்ரமான பார்வை சமூகத்திலிருந்து என்று முழுமையாக நீங்குகிறதோ அப்பொழுதுதான் சமத்துவம் பூரணத்துவம் பெற்றுள்ளது என்பதை உறுதிபட உரைக்க முடியும்.