எங்கள் கடவுள் துர்க்கா, ஒரு சூப்பர் பவர்

அதிகாரமிக்கப் பணி நிறைவுக்குப்பின், ஆயுர்வேத மருத்துவர் ஆகியுள்ள ஷீலாராணி சுங்கத் ஐ.ஏ.எஸ் அதிகாரி, பணியிலிருந்தபொழுதே யோகாவில் எம்.எஸ்.சி பட்டமும் பெற்று முன்னுதாரணமாகி உள்ளார். ”எங்கள் துர்க்காவைப் பார்! அவள் ஒரு சூப்பர் பவர்!” என, அயல்நாட்டில் வசிக்கும் தன் பேரனுக்கு நம்முடைய கலாச்சாரத்தைப் பெருமையாக எடுத்துக்கூறி பெண்களுக்கு மதிப்பைக் கொடுக்கக் கற்றுத் தருகிறார். தன் பெற்றோர், கணவர், குடும்பம், ஐ.ஏ.எஸ் பணி அனுபவங்கள் போன்றவை பற்றி நமது ‘விஜயபாரதம்’ இதழுக்கு சிறப்புப் பேட்டியளித்தார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஷீலாராணி சுங்கத் ஐ.ஏ.எஸ் நமது செய்தியாளர் சங்கீதா சரவணக்குமாருக்கு அளித்த நேர்காணல்.

தங்கள் குடும்பத்தை குறித்துக் சற்றுக் கூறுங்களேன்…
என் தந்தை ரயில்வேயில் துணைப் பொதுமேலாளராகப் பணியாற்றினார். தாய்இல்லத்தைக் கவனித்துக் கொண்டார். எனக்கு ஒரு சகோதரி உண்டு. இரண்டு பேருமே பெண்கள் எனினும் எங்களை தைரியமானவர்களாகப் பெற்றோர் வளர்த்தனர். மேடைப்பேச்சு, போட்டிகள் என அனைத்திலும் பங்குகொள்ள ஊக்குவிப்பார்கள். ‘நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம், உயர்ந்த லட்சியங்களை வைத்துக்கொள்’ எனச் சொல்வார்கள்.

உங்கள் படிப்பு குறித்து…
பள்ளிப் படிப்பை சென்னையில்தான் படித்தேன். 1978ல் ஐ.ஏ.எஸ் குத் தேர்வு பெற்றேன்.

தங்கள் கணவர் குறித்து ஓரிரு வார்த்தை…
ஓரிரு வார்த்தையல்ல, நிறையவே சொல்லலாம். என் கணவர் மோகன் வர்கீஸ் சுங்கத். நாங்கள் இருவரும் ஐ.ஏ.எஸ்ஸில் ஒரே பேட்ச். இவரைவிட சிறப்பானவராக நான் வேறு எவரையும் சொல்ல முடியாது. எனக்கு உற்றத்துணையாக விளங்குபவர் அவர். என் மகளுக்கு நான்கு வயதாகி இருந்தபோது புதுக்கோட்டைக்கு மாற்றலாகிச் சென்றேன். அப்போது, ‘நீ செல். குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினார். பல்வேறு பொறுப்புகளில் நான் சிறப்பாகப் பணியாற்றியதற்கும் தற்போது இருக்கும் நிலைக்கும் அவர்தான் முழுக்காரணம். இங்கு என் மாமனார் – மாமியாரைக் குறித்தும் நான் கூறவேண்டும். அவர்கள் எனக்கு எந்த விஷயத்திலும் எப்போதும் மறுப்பு சொன்னதில்லை. எப்போதும் உற்சாகப்படுத்தி ஊக்குவித்தனர், ஆதரவாக இருந்தனர். இப்படி ஒரு குடும்பம் அமைந்தது என் பாக்கியம்.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் சில கூற முடியுமா?
அவர் மிகவும் தைரியசாலி. நல்ல நினைவாற்றல், மொழிப்புலமை உடையவர். சிறந்த நிர்வாகி. காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவிகிதம் கொடுத்தார். ஒரு ஆய்வுக் கூட்டத்தில், இதனால் பிரச்சினைகள் வரும் என்று சிலர் கூறினர். இதுகுறித்து என் கருத்தையும் கேட்டார். 33 சதவிகிதம், சரியான முடிவென்றேன். என் கருத்தும் அதுதான் என்று ஒப்புக்கொண்டார். அதன்பலனாகவே இன்று காவல்துறையில் அதிகப் பெண்கள் உள்ளனர். பல பெண்கள் பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணமுடிகிறது. பெண்கள் முன்னேற வேண்டும் என்று எண்ணியவர் அவர். அதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருந்தார்.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எவ்வளவு பணிச்சுமை இருக்கும் என அனைவருக்கும் தெரியும். அப்போதுகூட நீங்கள் எம்.எஸ்.சி யோகா படித்தீர்கள் எனக் கேள்விப்பட்டோம். எப்படி அது உங்களுக்கு சாத்தியமாயிற்று?
அப்போது நான் பூம்புகார் நிறுவனத்தின் தலைவராகவும் கைவினைப் பொருட்கள் துறைக் கமிஷனராகவும் இருந்தேன். கடுமையான பணிச்சுமை இல்லை. படிக்க வேண்டும், புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. குடும்பத்தின் ஒத்துழைப்பும் இருந்ததால் இது சாத்தியமாயிற்று.

நீங்கள் பணிநிறைவு பெற்ற பிறகு, ஆயுர்வேதம் படித்து மருத்துவராக இருக்கிறீர்கள், இந்த வித்தியாசமான முயற்சி குறித்துக் கூறுங்களேன்?
நான் பணிநிறைவுக்கு முன்பே மருத்துவம் படிக்க முடிவு செய்திருந்தேன். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் என்ன செய்யப்போகிறீர்கள், வேறு பொறுப்புகள் ஏதாவது தரலாமா என்று கேட்டார். நீங்கள் தந்தால் செய்கிறேன். ஆனால், நான் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறேன் என்றேன். அவரும் சிரித்துக்கொண்டே ‘சரி’ என்று கூறினார். நோய்களுக்கு சிகிச்சை என்று பல மருத்துவங்களில் இருந்தாலும், ஆரோக்கியம், வாழ்வியல்முறை என்பது நமது பாரம்பரிய மருத்துவத்தில்தான் உள்ளதாக நான் கருதுகிறேன். எனவே அதனைக் கற்க வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் ‘ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியில்’ இணைந்து படித்தேன். மேலும் நான் படித்தபோது வயது வரம்பும் இல்லை.

பணிநிறைவுக்குப் பிறகு ஒரு மாணவியாகப் படித்த உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?
அந்த மாணவ – மணவிகளுடன் இணைந்து ஒரு சாதாரண மாணவியாகப் படித்தபோது இளமையாக உணர்ந்தேன். நான், அவர்கள் நன்றாகப் படிக்க ஊக்கமூட்டுவேன். அவர்கள் புதுப்புது பேஷன்கள் குறித்துக் கூறுவார்கள். அது மறக்கமுடியாத ஒரு நல்ல அனுபவம்.

அதிக வயதில் புதிதாகப் படிக்க விரும்புவோர் குறித்து உங்கள் பார்வை?
நாற்பது வயதிற்குக் மேல் புதிய கல்வியைக் கற்க விரும்புவோருக்கு அவ்விஷயத்தில் ஒரு தேடுதல் இருக்கும். அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும். அதனால் படிப்பிற்கு முட்டுக்கட்டை போடுவது சரியல்ல. புதிதாகக் கற்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளும் இருக்க வேண்டும்.

நீங்கள் தற்போது என்ன செய்கிறீர்கள், உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
தற்போது பயிற்சி மருத்துவராக இருப்பதால் உயர் மருத்துவர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன். பயிற்சி முடிந்ததும் மருத்துவமனை ஆரம்பிக்கும் எண்ணமுள்ளது.

கொரோனா காலத்தில் அரசின் செயல்பாடு எப்படி இருந்தது?
மிகச்சிறப்பாக இருந்தது. கபசுரக்குடி நீர், கஷாயம், யோகா என மருத்துவத்திற்கு அரசு கொடுத்த ஆதரவும் ஊக்குவிப்பும் சிறப்பானது. அதனால் மக்கள் விரைவாகக் குணமடைந்தனர். நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள பாரம்பரிய மருத்துவம் பெரிதும் உதவியது.

உங்கள் பொழுதுபோக்கு என்ன?
நிறைய படிப்பேன். சில காலத்திற்கு முன் என் மகளுடன் சேர்ந்து நாட்டியமும் கற்றேன். தோட்டப் பராமரிப்பும் பிடிக்கும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
உங்களை ஒரு “சூப்பர் உமன்’ என எண்ணாதீர்கள். அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டும். அனைத்தும் மிகச்சரியாக இருக்க வேண்டும் என ஒருபோதும் எண்ணாதீர்கள். நிறைகுறைகள் இருக்கத்தான் செய்யும். அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் அனைத்தையும் தூய்மையாகப் பராமரிக்க முடியாது. நேரமும் இருக்காது. அதற்காக வருந்த வேண்டாம். வீட்டுப் பெரியவர்கள், உறவினர், நண்பர்கள் என யார் உதவினாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

சரி, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உங்கள் ஆலோசனை?
வீட்டில் இருப்பவர்கள் சும்மாவே இருக்கிறார்கள் என நினைப்பது தவறு. அவர்களுக்கு வேறுவகையில் வேலைப்பளு, மன அழுத்தம் இருக்கும். நேரம் இருப்பவர்கள் வீட்டில் இருந்தே புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளுங்கள். அனைத்திற்கும் கணவ
ரையே எதிர்பார்க்க வேண்டாம்.

மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை…
உயர்ந்த லட்சியத்தை வைத்துக்கொள்ளுங் கள். அதனை நோக்கிக் கடினமாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றியடையலாம்.

ஒரு குடும்பம், தங்கள் வீட்டுப் பெண்களை எப்படி நடத்தவேண்டும் என நினைக்கிறீர்கள்?
நானும் என் குடும்பமுமே அதற்கு ஒரு நல்ல உதாரணம். என் குடும்பமும் அனைவரின் ஒத்துழைப்பும் இருந்ததால் என்னால் முன்னேற முடிந்தது. மற்றவர்களும் இதைப் போலவே தங்கள் வீட்டுப்பெண்களை நடத்த வேண்டும் எனக் கருதுகிறேன்.

சமூகம் பெண்களை எப்படி நடத்த வேண்டும்?
இன்றும் ஆணாதிக்க சமுதாயம் இருக்கத்தான் செய்கிறது. அது மாற வேண்டும். பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். பெண்களும் தங்கள் காலில் நிற்க வேண்டும். பல பெண்கள் அதிகாரத்திற்கு வரத் தயங்குகின்றனர். டீச்சர், கம்ப்யூட்டர் இன்ஜினீயர் போன்ற வேலைகளே போதும் என்னும் எண்ணம் அவர்களுக்குள் இருக்கிறது. அது உடைக்கப்பட வேண்டும். பெண்கள் அரசியலுக்கும், பெரிய பதவிகளுக்கும் வர வேண்டும். அவர்களால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் உருவாக்க முடியும்.

உங்கள் வேலை, அரசுப் பதவி, சாதனை குறித்து உங்கள் எண்ணம்?
வாழ்க்கை, வேலை, பதவி, பொறுப்பு என்றாலே சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதனை சந்தித்து, சாதித்துதான் நாம் முன்னேற வேண்டும். அவ்வகையில் என் வாழ்க்கை குறித்து நான் மிக நிறைவாக உணர்கிறேன்.

கடும் வேலைகளுக்கு மத்தியில் உங்களால், உங்கள் குடும்பத்துக்கு நேரம் கொடுக்க முடிந்ததா?
அனைத்தையும் முன்னதாகவே திட்டமிடுவேன். அதனால் என்னால் குடும்பத்துக்கு நேரம் கொடுக்க முடிந்தது. என் மகளின் பள்ளி விழாக்களை நான் ஒருபோதும் தவறவிட்டதில்லை. விழாவில் கலந்துகொண்ட பிறகு இரவு அலுவலகம் சென்று என் வேலைகளைச் செய்து முடிப்பேன்.

பாரதக் கலாச்சாரத்தில் பெண்கள் குறித்து உங்கள் பார்வை?
வெளிநாட்டில் வசிக்கும் என் பேரனிடம், ‘பாரதம் வந்து எங்கள் பெண் கடவுள் துர்க்காவைப் பார், எத்தனை கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தி வீரமாக இருக்கிறார் என்று பார். அவள் ஒரு சூப்பர் பவர்’ என்று கூறினேன். இதுதான் பாரதக் கலாச்சாரம். அப்படிப் பெண் தெய்வங்களை மதித்துக் கொண்டாடும் நாம், நிஜத்தில் அந்த மதிப்பை பெண்களுக்குக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.