வளரும் மென்பொருள் துறை

பாரதத்தில் மென்பொருள் சேவைத் துறையில் முதலீடு, 2021ம் ஆண்டில் 450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 170 சதவீதம் அதிகம். பெயின் அண்ட் கம்பெனி ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில், ‘2025ம் ஆண்டில் பாரத மென்பொருள் நிறுவனங்களின் பங்களிப்பு சர்வதேச சந்தையில் 8 முதல் 9 சதவீதம் வரை அதிகரிக்கும். பாரத நிறுவனங்கள் மிக விரைவாக அதேசமயம் அதிக முதலீடுகளை ஈர்க்கும் துறையாக வளர்ந்து வருகின்றன. மென்பொருள் சேவைத் துறையில் கூட்டு தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மனிதவள தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிக முதலீடுகள் இருக்கும். கல்வி தொழில்நுட்பம், சுகாதாரம், போக்குவரத்து, இ காமர்ஸ், இணைய பாதுகாப்பு, மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட துறைகள் தற்போது வளர்ந்து வரும் துறைகளாக கண்டறியப்பட்டுள்ளன.

பாரதத்தில் தற்போது மென்பொருள் துறையில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. இவற்றில் 9 நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம் 10 கோடி டாலருக்கும் அதிகம். இவை தங்கள் கூட்டாளியான அமெரிக்க நிறுவனங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. பாரதத்தில் பெருகிவரும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை, இணையதள வசதி ஆகியவற்றுடன் இத்துறைக்கு மத்திய அரசு அளித்துவரும் ஊக்குவிப்புகளால் இத்துறை அதிக முதலீடுகளை ஈர்க்கும் துறையாக வளரும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.