லஞ்சப் பணத்தில் தேர்தல் செலவு

ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்து அதில் பெருமளவு முறைகேடும் ஊழலையும் செய்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த கொள்கையால் ஆதாயம் அடைந்த மது விற்பனையாளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. டெல்லியில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உட்பட 12 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பி.ஆர்.எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினருமான கவிதாவுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளதையடுத்து அவரையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு ஆளானார். இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறை கூடுதல் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை, ஆம் ஆத்மி கட்சி தனது கோவா தேர்தலுக்கு பயன்படுத்தியுள்ளது. இந்தப் பணப் பரிமாற்றத்தில் ராஜேஷ் ஜோஷி மற்றும் அவரது ஷரியத் புரடெக்சன் நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்நிறுவனம் மூலமாக ஊழல் பணம் ஆம் ஆத்மி கட்சிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் வழியாகவும் ஹவாலா முறையிலும் பணப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தொகையில் ரூ. 30 கோடியை கோவா தேர்தல் விளம்பரத்துக்காக ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று அதில் தெரிவித்துள்ளது.